Skip to main content

ஆன்-லைன் கல்வி முறையில் மாணவர்கள் தடம் மாற வாய்ப்பு! மாற்று வழியை ஆராய வேண்டும்! -ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள்!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

 Rajeswari Priya

 

ஆன்-லைன் கல்வி முறையில் மாணவர்கள் தடம் மாற வாய்ப்புள்ளதால் மாற்று வழியை ஆராய வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த கல்வி ஆண்டின் இறுதிமுதல் கரோனா நோயின் தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டன. இந்தக் கல்வி ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது அனைவரும் அறிந்ததே. தற்போது ஆன்-லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறையில் உள்ளது. 

 

27 % முதல் 30% வரை மாணவர்கள் ஃபோன், லேப்டாப் வசதி இல்லாதவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. சமச்சீர் இல்லாத கல்வி, சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களது கண்களுக்கு பாதிப்பு வரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சனை ஆபாச இணையத்தளங்கள் தடை செய்யப்படாமல் ஆன்-லைன் வகுப்பு நடத்தப்படுவது. அதனால் மாணவர்கள் தடம் மாற வாய்ப்பு உள்ளது. 

 

http://onelink.to/nknapp

 

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆன்-லைன் கல்வி இன்று நடைமுறையில் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. நேற்று தேனியில் ஆன்-லைன் வகுப்பு புரியவில்லை என்று 10ஆம் வகுப்பு மாணவன் அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.

 

தொலைக்காட்சி வழியாக தனியார் பள்ளிகளும் பாடங்கள் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக ஆன்-லைன் கல்வி தடை செய்யப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் கல்வியை மட்டும் சார்ந்தது அல்ல. ஒழுக்கத்தையும் சார்ந்தது என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீனையும், கருவாடையும் கையிலெடுத்த பெண்களுக்கு கைக்கணினி வழி இணையக்கல்வி!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Online Education for Fishermen Women

கடலில் மீன்களைப் பிடித்தபிறகு அதனை அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் மீன்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் மீனவப்பெண்கள் பெரும்பான்மையாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதரம், பொருளாதரம் மேம்படும் வகையில் கை கணினி மூலம் இணையவழிக்கல்வி அளிப்பது மீனவப்பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு இணைய வழியில்  தீர்வு காண எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி  நிறுவனம் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் மீனவ பெண்களுக்கு கை கணினியை கொண்டு இணையவழி கல்வி மூலம் மீன்பதப்படுத்துதல் தொழிலை மேம்பாடு அடைய செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மீனவ பெண்களுக்கான இணையக்கல்வி, டிஜிட்டல் முறையை பயன்படுத்தி  மீன் தரமேம்பாடு மற்றும் விற்பனை திறன்கள் வளர்த்தல், அவர்களுடைய நம்பிக்கையையும், சமூக ஆதரவுகளையும் வளர்ப்பது மற்றும் விற்பனையை  மையமாகக் கொண்ட ஆக்கப்பூர்வமான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உருவாக்குவது போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.  

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 6 கடலோர மாவட்டங்களில் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், இராமநாதபுரம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி) 100 கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் மீனவப் பெண்களுக்கு இணையக்கல்வி -  இன்டர்நெட், கூகிள் பே , இணையத்தில் கணக்கு  தொடங்குவது, இணையத்தை பயன்டுத்தி பணப்பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள்  அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்தெடுக்கப்பட்ட மீனவ பெண்கள் சுய உதவிக்குழுகளுக்கான டிஜிட்டல் கருவிகள் (கைகனிணி), மீன் தர மேம்பாடு  மற்றும் மேலாண்மை,  மீன் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய இணைய வழி கல்வி, மீன் மற்றும்  வணிக மேம்பாடு தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பெண்களுக்கான பிரத்யேக ஹெல்ப் லைன் வசதிகள்.

மீன் பதப்படுத்துதல் மற்றும் வணிக மேம்பாடு தொடர்பான செய்திகளை அவர்களுக்கு கொண்டுசேர்க்க ஒலிவடிவ குறுஞ்செய்திகள் அனுப்புதல், மீன்பிடி பதப்படுத்துதல் மற்றும் அவற்றை  மேம்படுத்துவதற்கான கருத்துகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள பிரத்யேக ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மீன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஆன்லைன் இணையதளம் போன்ற திட்டங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கடலோர கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எம்.எஸ் சாமிநாதன் பவுன்டேசன் நிறுவனத்தின் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் தலைவரும், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான சி.வேல்விழி கூறுகையில், மீன்களை ஆண்கள் பிடித்த பிறகு அதனை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை மீனவ பெண்கள் தான் செய்து வருகிறார்கள். மற்ற வணிக கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் முறையில் வணிகம் நடைபெறுகிறது. ஆனால், மீன் மார்க்கெட் மற்றும் தெருக்களில் மீன் விற்கும் பெண்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்கு உள்ள கல்வி அறிவை கொண்டு எளிய முறையில் இந்த திட்டத்தை தொடங்கி கை கணினி மூலம் செயல்படுத்தி வருகிறோம். இந்த பயிற்சியில் பள்ளிக்கு செல்லாத மீனவப்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 1600 மீனவப்பெண்களுக்கு இணையக்கல்வி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடலூர் மாவட்டத்தில்  சின்னவாய்க்கால், கலைஞர் நகர், எம்ஜிஆர் நகர்,குமரப்பேட்டை, டிஎஸ் பேட்டை, சோனங்குப்பம், சி.புதுப்பேட்டை, சி.புதுக்குப்பம், மடவாப்பள்ளம், சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள கோரி, புதுநகர் ஆகிய  14 கிராமங்களை சேர்ந்த 421 பெண்களுக்கு தற்போதுள்ள கால சூழலுக்கு ஏற்றவாறு கை கணினியைக்கொண்டு டிஜிட்டல் முறையில் இணையக்கல்வி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் மூலம் மீனவ பெண்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்படும், பொருளாதார மேம்பாடு ஏற்படும் என்பது உறுதி என்கிறார். மீனையும், கருவாட்டையும் கையெலெடுத்த பெண்களுக்கு கை கனிணி மூலம் இணையவழிக்கல்வி அளிப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

“மாணவர்களே தயவுசெய்து படிக்கட்டில் பயணம் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்” - ராஜேஸ்வரி பிரியா

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

“Students please avoid traveling on stairs” – Rajeswaripriya

 

மதுரையில் இன்று காலை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பேருந்தில் இடம் இல்லாத காரணத்தால் படியில் நின்று பயணித்தார். இந்நிலையில் அவர் திடீரென தவறி கீழே விழுந்து பலியானார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இன்று(29/8/2022) மதுரையில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது.

 

படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள் என்று யார் கூறினாலும் மாணவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. என்னதான் தீர்வு என்று பார்த்தால் பள்ளி மற்றும் பணிகளுக்கு செல்லும் நெருக்கடியான காலை மாலை நேரங்களில் அதிக பேருந்தினை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதிக கூட்டங்கள் பேருந்தில் ஏறுவதனை தடுக்க வேண்டும்.

 

அதிக கூட்டம் ஏறினால் அரசுக்கு வருமானம் என்று எண்ணாமல் உயிர் போகும் ஆபத்தினை ஏற்படுத்தும் என்று போக்குவரத்து துறை கருத வேண்டும். மேலும் பேருந்தில் பாதுகாப்பிற்காக கதவுகள் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மகனை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு தினமும் ‘படிக்கட்டில் பயணிக்காதீர்’ என்று அறிவுரை கூற வேண்டும்.

 

மாணவர்களே தயவுசெய்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உங்களை இழந்த பிறகு உங்கள் பெற்றோர் நடைப் பிணமாகவே வாழ்கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.