Skip to main content

"இணையவழி கல்வி ஆபத்தானது!" எச்சரிக்கும் த.மா.கா. யுவராஜா

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
online classes

 

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன.

'இந்த இணைய வழி கல்வி ஆபத்தானது' என எச்சரிக்கும் த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா, "மழலையர் பள்ளி தொடங்கி, பள்ளிக் கல்வி இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி கற்பித்தல் என்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்ற நிலை இருக்கிறது. 

தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, 'ஸ்மார்ட் போன்' போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், 'வை-ஃபை' மற்றும் 'பிராட்பேண்ட்' வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. குறிப்பாகக் கிராமங்களில் இந்த வசதிகள் கிடைப்பதே மிகவும் அரிது. 

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என் எஸ் எஸ் ஓ)  வெளியிட்டுள்ள 2017-18 அறிக்கையில், 'கிராமப்புறங்களில் உள்ள 4.4 சதவீத வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன என்றும், 'கிராமப்புறங்களில் 14.9 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் 42 சதவீதம் பேருக்கும் மட்டுமே இணையதள வசதி இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், 'மடிக்கணினிகளை 11 சதவீதம் பேரும், ஸ்மார்ட் போனை 24 சதவீதம் பேரும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்' என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது. 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிமாணவர்களுக்கு தேவையான மடிக்கணினி, அல்லது 'ஸ்மார்ட் போன்' இணையதள வசதிகள், 'வை-ஃபை' மற்றும் 'பிராட்பேண்ட்' வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்க அரசு உடனே ஏற்பாடு செய்யவேண்டும்.

இணையவழி கற்றல் வழக்கமான வகுப்புகளில் கற்கும் அனுபவத்தை ஒருபோதும் தந்துவிடாது. இணைய வழி கல்வி தொடரும் பட்சத்தில் 5 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியில் 3 மணி நேரமும், 10 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியில் 4 மணி நேரமும்  கற்பிக்கலாம்" என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டணி!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
tmk with BJP Alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. -  பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனிடம் செய்தியாளர்கள் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி அமைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர்,“ 15 நாட்களுக்கு முன்பே ஒரு முறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போது அ.தி.மு.க. - தா.மா.க. கூட்டணிக்காக பேசாவிட்டாலும், நாட்டு நலன், எதிரிகளை வீழ்த்துவது குறித்து பேசினேன் என்று கூறுவதில் இருந்தே புரிந்து கொள்ளுங்கள். எதிரியை வீழ்த்த பலமான கூட்டணி தேவை என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினேன். அ.தி.மு.க. -  பா.ஜ.க. கூட்டணி முறிந்த பிறகு இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் எனவும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தால் தான் தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ள முடியும் எனவும் த.மா.கா. கூறிவருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வை - பா.ஜ.க. கூட்டணியில் இணைக்க ஜி.கே.வாசன் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. -  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் ஏற்கெனவே இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா அரசு நோட்டீஸ்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Goa govt notice to cricketer Yuvraj Singh

 

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணி போட்டியில் வெல்வதற்கும் இரு உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்த யுவராஜ் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். இருந்தும் புற்றுநோய்க்கு முன்பு இருந்த ஆட்டம் வெளிப்படாததால் 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.   

 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் சிங் கோவா மாநிலத்தில் மோரிஜிம் அருகே வர்ச்சவாடாவில் காசா சிங் என்றொரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார். தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத்துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

அதில் டிசம்பர் 8 ஆம் தேதி யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று கோவா சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது. யுவராஜ் சிங் ஆஜராகி முறையாக விளக்கம் தரவில்லை எனில் விதிமீறல் குற்றத்திற்காக அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.