Skip to main content

கேலிக்கூத்தாக மாற்றப்படும் ஆன்லைன் வகுப்பைத் தடை செய்ய வேண்டும்... ராமதாஸ்

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

ramadoss


மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் ஆன்லைன் வகுப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் என்பவை புதிய நாகரிகமாக மாறி வருகின்றன. வகுப்பறைக்  கல்வி முறைக்கு எந்த வகையிலும் ஈடாக முடியாத ஆன்லைன் கல்வி முறை தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் புதிய உத்தியாக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கப்பூர்வமாக பயனளிக்காத இந்த முறையைப் பள்ளிக்கல்வித்துறை ஊக்குவிப்பது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் இயல்பான சூழலில் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், கரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. அதேநேரத்தில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகமும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாக பள்ளிக்கல்வி இயக்ககமும் இருந்தாலும் கூட, மாநில பாடத் திட்டத்தைக் கடைப்பிடிக்கும் இரு வகை பள்ளிகளிலும் ஒரே பாடநூல்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன; ஒரே தேர்வு முறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படாத நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் பாடம் நடத்த அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமாக ஆகி விடாதா?

இவ்வாறு வினா எழுப்புவதன் நோக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது அல்ல. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான். ஆன்லைன் வகுப்புகள் எனப்படுபவை தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடு; அவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது பிற்போக்குத்தனம் இல்லையா? என்று சிலர் வினா எழுப்பலாம். கல்வி என்பது அனைவருக்கும் சமமானது எனும் நிலையில், அதற்காகக் கையாளப்படும் எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், அது கல்வி பெறும் அனைத்து நிலை மாணவர்களுக்கும் சாத்தியமாகக் கூடியவையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எவ்வளவு சிறப்பான, நவீனமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதங்களே அதிகமாக இருக்கும்.
 


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள்; படிப்பறிவு இல்லாதவர்கள். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் செல்பேசிகள் தேவை. ஒரு வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் இரண்டு தொலைபேசிகள் தேவை. கிராமப்புறங்களில் வாழும் பெரும்பான்மையான பெற்றோர் சாதாரண வகை செல்பேசிகளைத் தான் பயன்படுத்துவார்கள்; அவர்களிடம் ஸ்மார்ட் செல்பேசிகள் இருக்க வாய்ப்பில்லை. கல்விக்கட்டணமே செலுத்த வசதியில்லாத அவர்களால் இரு குழந்தைகளுக்கும் தலா ரூ.10,000 செலவில் தனித்தனி செல்பேசிகளை வாங்கித் தருவது சாத்தியமில்லை. அத்தகைய  மோசமான சுழலில் அவர்களின் குழந்தைகளால் எப்படி ஆன்லைன் வகுப்புகளில் இணைய முடியும்?

அதுமட்டுமின்றி, நகர்ப்புற, பணக்கார மாணவர்களுக்கு ஏற்கனவே தனிப்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. அத்துடன் இப்போது நகர்ப்புற தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் கிடைக்கின்றன. இவை எதுவுமே கிராமப்புற, அரசு பள்ளின் மாணவர்களுக்குக் கிடைக்காத நிலையில் இரு தரப்பினரும் ஒரே தேர்வை எழுதினால், நகர்ப்புற, பணக்கார மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்; கிராமப்புற மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். இது எந்த வகையில் சமநீதியாகவும், சமூக நீதியாகவும் இருக்கும்?

இதற்கெல்லாம் மேலாக ஆன்லைன் வகுப்பு எனப்படுபவை கேலிக்கூத்தாக மாற்றப்பட்டு வருகின்றன.  பல பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்குக் கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதே இதற்குச் சாட்சியாகும். ஆன்லைன் வகுப்புகளைத் தனியார் பள்ளிகள் நடத்துவதன் நோக்கம் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தர வேண்டும் என்பதை விட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது தான். வகுப்புகளைத் தொடங்காவிட்டால் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை விட, கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாது என்று கூறி பெற்றோரிடம் பணம் பறிப்பது தான் அதிகமாக நடக்கிறது. கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் வாட்ஸ் அப் குழுவில், பணம் செலுத்தாத குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறிய செய்தியைப் பகிர்ந்ததற்காக 100 மாணவர்களை பள்ளியிலிருந்து நிர்வாகம் நீக்கியிருக்கிறது. இதைத் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.
 

http://onelink.to/nknapp


வகுப்பறைகளில் உயிர்ப்புடன் நடத்தப்படும் பாடங்களில் கிடைக்கும் தெளிவையும், புரிதலையும் ஆன்லைன் வகுப்புகளால்  வழங்க முடியாது என்பது தான் உண்மை. ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது.  பள்ளிகள் சில மாதங்கள் தாமதமாகத் தொடங்கப்படுவதாலோ, தாமதமாகும் காலத்தில் மாணவர்கள் பாடங்களைப் படிக்காததாலோ எந்தப் பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அதற்கு மாற்றாக, பள்ளிகள் எவ்வளவு தாமதமாகத் திறக்கப்படுகின்றனவோ, அதற்கு ஏற்ற வகையில் பாடங்களின் அளவைக் குறைக்க தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''. இவ்வாறு கூறியுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.