ADVERTISEMENT

வெங்காய தட்டுப்பாடு... அதிமுக அரசிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்... ஈஸ்வரன் கண்டனம்!

01:29 PM Oct 22, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெங்காயத்தின் விலை ஏற்றத்திற்கு பதுக்கல் தான் காரணம். புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், வெங்காயத்தைப் போல பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு துணைபோகும் தமிழக அ.தி.மு.க அரசிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறார்கள் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 228.19 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி 268.56 லட்சம் டன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு வெங்காய உற்பத்தியை விட 17.69 சதவீதமும், சாதராண உற்பத்தியை விட 23.91 சதவீதமும் அதிகமாகும். வெங்காய உற்பத்தி இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் போது எப்படி விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏற்படும்.

ஆந்திராவில் மழை பெய்வதால் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை துளிகூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 3.65 சதவீதம் தான் ஆந்திராவில் உற்பத்தியாகிறது. இதை டன் கணக்கில் குறிப்பிட்டால் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் உற்பத்தியாகும் 268.56 லட்சம் டன் வெங்காயத்தில் 9.80 லட்சம் டன் மட்டும்தான் ஆந்திராவில் உற்பத்தியாகிறது.

இந்தியா முழுவதும் உள்ள வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில் கடந்த ஆண்டை விட அதிக உற்பத்தியே இருக்கிறது. வெங்காய உற்பத்தி அதிகமாக இருந்தும் சந்தைகளில் வெங்காய வரத்து குறைவாகவே இருக்கிறது. இதற்கு வெங்காயப் பதுக்கலே மிக முக்கியக் காரணம். இன்றைய நிலையில் வெங்காயத்தைப் பதுக்குவது சட்டப்படி குற்றமாகும். பதுக்கல்காரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதுவே புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் பதுக்கலுக்கு சட்டப்படி அரசே வழிவகை செய்கிறது. பதுக்கல்காரர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்காயத்தைப் பதுக்கினால் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார். புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் அமைச்சர் இப்படிப் பேச முடியுமா? அல்லது நடவடிக்கைதான் எடுக்க முடியுமா?. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளித்துவிட்டு, இப்போது பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

வெங்காயத்தைப் பதுக்கி, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, தற்போது விலையேற்றத்தைக் கொண்டு வந்திருப்பது, ஏழை எளிய நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிப்படைய வைத்திருக்கிறது. இதே நிலைமைதான் புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வரும்போது மற்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு விலை அதிகரிக்கும். விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதற்கும் இதுவே உதாரணம்.

இதனால்தான் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்கிறோம். அத்தியாவசிய உணவுத் தேவையைப் பாதிக்கும் இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மக்களிடையே பசியும், பட்டினியும் ஏற்படும். மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் தமிழக அ.தி.மு.க அரசிற்கு, மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT