மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று (27.11.2019) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அந்த நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பட்னாவிஸுக்கு முன்பாகவே துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் சிவசேனாவின் ஆட்சி அடுத்து அமையும் என்றும் அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக உத்தவ் தாக்கரே அவர்கள் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
இதனால் சிவசேனா கட்சியில் இருக்கும் சில முக்கிய தலைவர்கள் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் வெற்றிபெற்று விட்டு பின்னர் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்று அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்கின்றனர். இதனையடுத்து சிவசேனா கட்சியிலுள்ள மூத்த தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் சிவசேனாவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தான் தான் பதவி விலகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் சிவசேனா கட்சியில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க திட்டம் போட்டு வருவதாக கூறுகின்றனர். இதன் விளைவாகவே ரமேஷ் சோலங்கி விலகி இருக்க கூடும் என்று தெரிவித்து வருகின்றனர்.