Advertisment

‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் –சீமான்

‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. நாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது.

Advertisment

Seeman

அகன்ற பாரதத்தை நோக்கமாகக் கொண்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்தழித்து ஒற்றை முகமாக நாட்டை நிலைநிறுத்தத் துடியாய் துடிக்கிறது. அதற்கான முன்நகர்வாகவே, ‘ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவிநியோகம்! ஒரே தீர்ப்பாயம்! ஒரே குடும்ப அட்டை’ என யாவற்றையும் ஒற்றைமுகப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இவையாவும் இந்நாட்டின் மேன்மைமிக்க கோட்பாடானக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறையாண்மையையும் தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.

இந்தியாவிலேயே பொதுவிநியோகத்திட்டத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் தமிழகமாகும். பொதுவிநியோகப் பகிர்வைச் செயற்படுத்த தமிழகம் முழுவதும் இருக்கிற கட்டமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. உணவுப்பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவர முற்பட்டபோது தமிழகம் அதனை எதிர்த்ததற்குக் காரணமும் இதுவேயாகும். பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வையே முற்றிலும் சீர்குலைத்துவிடும்.

இந்தியப் பெருநிலத்திலேயே தனித்துவம் மிக்கதாக விளங்குவது தமிழ்நாடுதான். சிறப்புகள் பலவாய்ந்த தமிழர்களின் அத்தகையத் தாயகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே இத்திட்டம் முழுக்க முழுக்கப் பயன்படும். ஏற்கனவே, பல இலட்சக்கணக்கான வடஇந்தியர்கள் தமிழகத்திற்குள் உட்புகுந்து வாக்குரிமையைப் பெற்று தமிழர்களின் அரசியலைப் பங்கிடும் வேளையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பைத் தட்டிப்பறித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிற சூழலில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; அயலவர்களின் ஆக்கிரமிப்பால் திக்கித் திணறும். சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும்.

கடுமையான நிதித்தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம் 5,000 கோடி நிதியினை மானியமாக அளித்தே பொது விநியோகப்பகிர்வைச் செயற்படுத்தி வருகிறது. அத்தகைய நிலையில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வைப் பங்கிட்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்பது முழுக்க முழுக்கத் தமிழர்களின் உரிமைப்பறிப்புக்கும், உணவுச்சுரண்டலுக்குமே வழிவகுக்கும். தமிழகத்தின் பொருளாதாரத்தை வரியாக அள்ளி எடுத்துச் செல்கிற மத்திய அரசு, அதனைக் கிள்ளித் தரக்கூட முனைவதில்லை. பேரிடர் காலங்களில்கூட தமிழகம் கேட்கிற நிதியைத் தராது வஞ்சித்தே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் உணவுப்பகிர்வையும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அபகரித்துக் கொள்ள வழிவகை செய்வது மிகப்பெரிய மோசடித்தனம்.

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கோடு செயற்படும் எதேச்சதிகார பாஜக அரசின் பாசிச நடவடிக்கையே இது. இதற்குத் துணைபோகிற அதிமுக அரசின் செயலானது வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்தத் தமிழர்களுக்குச் செய்யப்படுகிற பச்சைத்துரோகம். ஆகவே, வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது’ எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, தமிழர்களை வடஇந்தியர்கள் சுரண்டுவதற்கும், தமிழர்களைப் பசி பட்டினியில் தள்ளுவதற்கும் வழிவகை செய்கிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Central Government Tamilnadu Ration card seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe