Skip to main content

தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்?-பாமக ராமதாஸ் கேள்வி

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

omk Ramadas Question to tn govt

 

சமீப காலமாக அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, சக மாணவர்களை தாக்குவது, போதை பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது என பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மாணவர்களின் ஒழுக்கம், எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் நலனுக்காக வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் முன்னெடுப்புகள் குறித்து தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அவை தேவையானவை; வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, மாணவர்களைச் சுற்றி மிக மோசமான சூழலை உருவாக்கி வைத்து விட்டு, இவற்றை செய்வது விழலுக்கு இழைத்த நீராகவே அமையும்.

 

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தாக்க முனைதல், பொது இடங்களில் மோதலில் ஈடுபடுதல், மது அருந்தி வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட மாணவர்களின் செயல்பாடுகள் சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் இத்தகையப் போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும்; அவர்கள் நல்வழிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும். இதைப் புரிந்து கொண்ட தமிழக அரசு, அதற்காக மாணவர்களின் கவனத்தை கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு, நீதி போதனை, சுற்றுலா என திசை திருப்பும் நோக்குடன் பல நிகழ்ச்சிகளை வரும் ஆண்டில் நடத்தவுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கது போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவது ஆகும். அரசின் இந்த நோக்கம் போற்றத்தக்கது.

 

மாணவர்கள் தவறான வழியில் பயணிப்பதற்கு சமூக நல நோக்கமற்ற திரைப்படங்களும், சமூக சூழலும் தான் முக்கியக் காரணங்கள் ஆகும். அவற்றையும் கடந்த முதன்மைக் காரணம் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவது ஆகும். மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், மது மாணவர்களை வளைத்துப் பிடித்திருக்கிறது என்பதை அரசு உணர்ந்திருக்கிறது என்பது உறுதியாகிறது. ஆனால், எரிவதை பிடுங்கினால் தான் கொதிப்பது நிற்கும்; மதுக்கடைகளை மூடினால் தான் மாணவர் சமுதாயத்தை காப்பாற்ற முடியும் என்பதை மறந்து விட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவது கொதிக்கும் உலையில் நீர் ஊற்றுவதற்கு ஒப்பானது தான். அதனால் எந்த பயனும் ஏற்படாது; மாணவர் சமுதாயம் சீரழிவதையும் தடுக்க முடியாது.

 

pmk

 

படிக்கும் பருவத்தில் மது அருந்துவதும், அதன் போதையில் வன்முறையில் ஈடுபடுவதும் தான் சாகசம் என்ற தவறான எண்ணம் மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. மது அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை திரைப்படங்களும், சமூகச் சூழலும் ஏற்படுத்துகின்றன என்றால், மாணவர்கள் மது குடிப்பதையும், அதற்கு அடிமையாவதையும் சாத்தியமாக்குவது தெருவுக்குத் தெரு திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான். அவற்றை மூடாமல் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பது அறவே சாத்தியமற்ற ஒன்றாகும். இதை தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மது தாராளமாக கிடைப்பது தான், மதுவுக்கு மக்கள் அடிமையாவதற்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. அது தான் தமிழகத்தில் நடக்கிறது. மாணவர்களால் எழுதுபொருட்கள்  வாங்குவதை விட, மிகவும் எளிதாக மதுவை வாங்க முடிகிறது. நகரப்பகுதிகளில் ஒரு மாணவர் அவரது வீட்டிலிருந்து பள்ளிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்றால், இடையில் குறைந்தது மூன்று இடங்களிலாவது மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். இந்த சூழல் தான் மாணவர்களையும், இளைஞர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி, அவர்களின் குடும்பங்களை சீரழிக்கிறது.

 

நகரப்பகுதிகளாக இருந்தால் பள்ளிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும், மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிலும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு தாராளமாக அனுமதி அளித்துள்ளது.  பள்ளிகளில் இருந்து 50 மீட்டர் அல்லது 100 மீட்டர் என்பது பள்ளி வளாகத்தின் எல்லையிலிருந்து தான் கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் பள்ளி வளாகத்தில் மையத்திலிருந்து இந்த தொலைவு கணக்கிடப்படுகிறது. பள்ளிகளின் வளாகங்களே 300 மீட்டர், 400 மீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் என்பதால் பள்ளி வளாகத்திற்கு அடுத்த கட்டிடத்திலேயே மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.

 

அதேபோல், பள்ளி வளாகங்களுக்கு மிக அருகில் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் நேரடியாகவும்,  கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மறைமுகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. மது, புகை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கு மத்தியில் வாழும் மாணவர்களிடம் மதுவுக்கு எதிராக விழுப்புணர்வு பரப்புரை செய்யும் போது அதனால் எந்த பயனும் ஏற்படாது; அரசு எதிர்பார்க்கும் பயனை இது தராது.

 

மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்; போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால், மதுக்கடைகளை மூட வேண்டும்; புகையிலைக்கு தடை விதிக்க வேண்டும். அதை செய்யாமல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக கூறுவது, அரசு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, மாணவர்கள் சமுதாயத்தையும் ஏமாற்றும் செயலாகவே அமையும்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.