official letter released senthil balaji issue

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது.

Advertisment

இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஆளுநர் தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில், “செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்கம் குறித்து அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பது சிறந்ததாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அட்டர்னி ஜெனரலை அணுகி அவரது கருத்தை கேட்கிறேன். அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு குறித்து மீண்டும் தெரிவிக்கப்படும் வரைபதவி நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment