Skip to main content

அக்டோபர் 14இல் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் சென்னை வருகை

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

On October 14 major leaders of the 'India' alliance visited Chennai

 

இந்தியா கூட்டணியின் முக்கிய அகில இந்தியத் தலைவர்கள், திமுக மகளிர் அணி சார்பில் முன்னெடுக்கும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள அக்டோபர் 14 ஆம் தேதி  சென்னை வருகை தர உள்ளனர்.

 

இது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும்  கலைஞர் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அவர்தான் அரசு வேலைவாய்ப்பிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்து சட்டமாக்கினார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘திராவிட மாடல்' ஆட்சியின் வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிரை அர்ச்சகராக்கியது எனப் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.

 

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்ட கால கோரிக்கை. அத்தகைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுக்கால மறதிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலையில், 2029 ஆம் ஆண்டு வரும் எனத் தெரிவித்துள்ளனர். அதுவும் நிச்சயமற்றதாக உள்ளது. எனவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதைக் காலத்தின் தேவையாகக் கருதி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் வருகின்ற 14.10.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 'மகளிர் உரிமை மாநாடு' பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

 

On October 14 major leaders of the 'India' alliance visited Chennai

 

இந்த மாநாட்டில் பங்கேற்கத் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கலைஞரால் இந்திராவின் மருமகளே வருக என வரவேற்கப்பட்டவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.