Advertisment

“இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” - ஓ. பன்னீர்செல்வம்!

O. Panneerselvam says This is political vendetta 

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு என எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்கள்மீது கூடுதல் சுமையைத் திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் சுமத்தி தமிழ்நாட்டு மக்களின் கடும் அதிருப்தியை தி.மு.க. சந்தித்துக் கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டு அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தன்னுடைய சாதனைகளால் தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் வெற்றி பெற்றது.

Advertisment

இந்த நிலையில், ‘ஒன்றுபட்ட அதிமுக’ என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஈடுபட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் இரா. வைத்திலிங்கம் 2025 இல் அதிமுக ஒன்றிணையும் என்று சில தினங்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார். அதிடமுக ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மீது தி.மு.க. அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் மீது நேற்று தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சீரழிந்து வருவதையும், தி.மு.க.வின் மேல் உள்ள கடும் அதிருப்தியையும் மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

Advertisment

தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இந்த வழக்கு சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என்பதை தி.மு.க.விற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதிமுகவை ஒன்றிணையவிடாமல் தடுத்து அதன்மூலம் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் கனவு காண்கிறார். அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe