Advertisment

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா திடீர் சந்திப்பு!

O. Panneerselvam - Sasikala sudden meeting

Advertisment

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வருகைப் புரிந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் மரியாதை செலுத்துவதற்கு ஒரே நேரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் வந்துள்ளனர். இந்த சூழலில் இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை தந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் வரவேற்பு தெரிவிக்கும் விதமாக, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்க ஒன்று” என தெரிவித்தார்.

Advertisment

மேலும் ஓ.பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, “நான் அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான் என்று ஆரம்பத்தில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையேயான இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sasikala
இதையும் படியுங்கள்
Subscribe