O. Panneerselvam report on road toll hike

Advertisment

சாலை வரி அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவ்வாறு உயர்த்துவது கொடுமை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொன்னதை செய்வோம் என்ற பெயரில், மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், மாதம் ஒருமுறை மின் கட்டணம், ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை, ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 3.5 இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், நீட் தேர்வு ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொல்லாததை செய்வோம் என்ற பெயரில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, வெளிமுகமை மூலம் பணி நியமனம் என்ற வரிசையில் தற்போது சாலை வரியை உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, அதிமுக ஆட்சிக் காலத்தில் வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்படாத நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது, இரு சக்கர வாகனத்தில் மொத்த விலையில் 8 விழுக்காடு சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டாக பிரித்து, ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள வாகனத்திற்கு 10 விழுக்காடு சாலை வரி விதிக்கவும், ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ள வாகனத்திற்கு 12 விழுக்காடு சாலை வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதேபோன்று, தற்போது பத்து இலட்சம் ரூபாய் வரையிலான காருக்கு 10 விழுக்காடு வரியும், பத்து இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட காருக்கு 15 விழுக்காடு வரியும் வசூலிக்கப்படுகிறது. இரண்டு வகையாக உள்ள இந்த வரியை நான்காக பிரித்து, 5 இலட்சம் ரூபாய் வரையுள்ள கார்களுக்கு 12 விழுக்காடு வரியும், 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாய் வரையுள்ள கார்களுக்கு 13 விழுக்காடு வரியும், பத்து இலட்சம் ரூபாயிலிருந்து 15 இலட்சம் ரூபாய் வரையுள்ள கார்களுக்கு 15 விழுக்காடு வரியும், 20 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கார்களுக்கு 20 விழுக்காடு வரியும் விதிக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கனரக வாகனங்களின் சாலை வரியும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த வரி விதிப்பு இரு சக்கர வாகனத்தின் விலையை 7,000 ரூபாய் வரையிலும், கார்களின் விலையை 25,000 ரூபாய் வரையிலும் உயர்த்தும். சாலை வரி என்பது சதவீத அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், வாகனங்களின் விலை உயர்ந்தாலே சாலை வரியும் உயரும் என்ற நிலையில், அதனுடைய சதவீதத்தை ஏற்றி மேலும் வாகனத்தின் விலையை உயர்த்துவது என்பது கொடுமையிலும் கொடுமை” என தெரிவித்துள்ளார்.