ntk

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நாளை (07/05/2020) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்கவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ் படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும்.

தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது. தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கரோனாவைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. அத்தகைய வரலாற்றுப் பிழையைச் செய்து பெரும் பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும்என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.