NTK candidate vehicle confiscated

Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, அமமுக என அனைத்து கட்சியினரும் உரிய அனுமதி பெற்றுவாகனங்களில் பேனர்கள் கட்டி, ஒலி - ஒளி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (26.03.2021) நாம் தமிழர் கட்சியின் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் அந்தப் பகுதியில் உரிய அனுமதியின்றி ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்துள்ளார். பொதுவாக தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி உரிய அனுமதி பெற்று வேட்பாளர் உபயோகிக்கும் வாகனங்கள் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரிவித்து முன் அனுமதி பெற்ற பிறகேபிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் கே.கே. நகர் ராமசாமி தெருவில் காவல்துறையின் முன் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தேர்தல் பறக்கும் படையினர் அளித்த தகவலின் அடிப்படையில் ராஜேந்திரன் பிரச்சாரத்திற்கு உபயோகித்த ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர். இதனால் அக்கட்சியின் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததனால் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.