Skip to main content

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு!

Published on 09/11/2018 | Edited on 10/11/2018
NR Congress MLA



புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். அவரது தந்தை ஆனந்தன். 2007-2008 ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக ஆனந்தன் பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐக்கு புகார் சென்றது. 
 

அதன் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஆனந்தன் ரூபாய் 3.15 கோடி அளவில் சொத்து குவித்து இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து சி.பி.ஐ  ஆனந்தன், அவரது மகன் அசோக்ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ  சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 

வழக்கு விசாரித்த சி.பி.ஐ  தலைமை நீதிபதி தனபால் அசோக் ஆனந்த் எம்எல்ஏ, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்து,  இருவருக்கும் 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்தார். அத்துடன் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த 1 கோடி 57 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்தை பறிமுதல் செய்து வசூலிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.


அதேசமயம் இருவருக்கும் சொத்து ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒர் ஆண்டு தண்டனை பெற்ற அசோக் ஆனந்த் எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்க அறிவிப்பை சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவின் பேரில் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் வெளியிட்டுள்ளார். 
 

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏவின் தகுதி நீக்கத்தால் விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
 

 

 


 

சார்ந்த செய்திகள்