Advertisment

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி; தொடர்ந்து நீடிக்கும் இழுபறி..! 

NR Congress-BJP alliance

2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி கடந்த வாரத்தில் கவிழ்ந்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, இடதுசாரிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதில், அதிமுக - பாஜக கூட்டணியில், முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, 'நமச்சிவாயம்தான் முதலமைச்சர் வேட்பாளர்' என்று சூசகமாக அறிவித்ததால், ரங்கசாமி அதிருப்தியில் இருந்தார். ஆனால், பா.ஜ.க மேலிடம் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேசமயம் முதலமைச்சர் வேட்பாளர்மற்றும் சரிபாதி தொகுதிகள் வேண்டும் என்பதில் ரங்கசாமி விடாப்பிடியாக இருந்து வருகிறார். இதனால் கூட்டணி உடன்பாடு ஏற்படுவதில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே இழுபறி நீடித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனியார் ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் எந்தவிதமான முடிவும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லஷ்மி நாராயணன், என்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தன்னை என்.ஆர்.காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, “பா.ஜ.க கூட்டணியில் நீடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். கலந்து பேசி முடிவெடுப்போம்” என்றார்.

இந்நிலையில் நேற்று (03.03.2021) மாலை பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, எம்.பி. ராஜுசந்திரசேகர், நிர்மல்குமார் சுரானா மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் சாரத்தில் உள்ள அண்ணாமலை நட்சத்திர விடுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிந்து நிர்மல்குமார் சுரானா மற்றும் ரங்கசாமி வெளியே வந்தனர். இதுகுறித்து நிர்மல்குமார் சுரானாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணியில் உள்ளதாகவும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும் கூறினார். மேலும், 'பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்' எனத் தெரிவித்தார். ஆனாலும் புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி உடன்பாடு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

Pondicherry nr congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe