Skip to main content

26-ஆம் தேதி பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு... மு.க.ஸ்டாலின் 

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
M. K. Stalin

 

 

மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்திய தொழிற்சங்க மையங்களின் சார்பில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.கழகம் முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும், மாபெரும் வேலை நிறுத்தத்தின் போர்ப் பிரகடனப் பேரெழுச்சி டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்; வீழ்வது மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து இந்திய தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று நடத்தப்பட இருக்கும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

முதலாளிகளை மட்டுமே மனதில் கொண்டு, அவர்கள் மேலும் மேலும் கொழிக்கும்படி வளர்க்கவும், முழு நேரமும் பாடுபடும் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சிக்கவுமான செயலில் மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு ஈடுபட்டு - ஏற்கனவே தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு இருந்த 44 தொழிலாளர் சட்டங்களுள்- 15 சட்டங்களை ரத்துசெய்து விட்டது. மீதியுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி - தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் திட்டமிட்டுப் பறித்து விட்டது. பல நூற்றாண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை- தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை எல்லாம் ரத்து செய்யும் முன்பு,  நாடாளுமன்றத்தின் இரு  அவைகளிலும் விவாதங்கள் ஏதும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை. அந்தச் சட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் ஏற்கவில்லை. ஏன், எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நேரத்திலேயே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும்  போக்காகும்!


தொழிலாளர் நலத் திட்டங்களை நிறைவேற்றி,  என்றைக்கும் அவர்கள் பின்னால் ஆதரவளித்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் - கழகத்தின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் சார்பிலும் - நாடாளுமன்றம் மற்றும் வெளி அரங்கில் இந்தச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் - பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அதைத் துஷ்பிரயோகம் செய்து,  தொழிலாளர்களுக்கு மாறாத துரோகம் செய்து விட்டது மத்திய பா.ஜ.க. அரசு. அந்த துரோகத்திற்கு இங்குள்ள எடப்பாடி திரு. பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க. அரசும் சிறிதும் கருணையில்லாமல் கைகொடுத்து நிற்கிறது.


“பணியிடப் பாதுகாப்பு நல்வாழ்வு மற்றும் பணியிடச் சூழல்கள் சட்டத் தொகுப்பு”, “சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு”, “இந்தியத் தொழில் உறவுச்சட்டத் தொகுப்பு”, “ஊதியச் சட்டத் தொகுப்புச் சட்டம்” என நான்கு தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர்களின் மதிப்புமிக்க உரிமைகளுக்குக் குந்தகம் விளைவித்துள்ளது. இது தவிர விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்களை - நடவடிக்கைகளைக் கண்டித்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும்  பொது வேலை நிறுத்தம் மிக முக்கியமான தருணத்தில் நடைபெறுகிறது. 


ஆட்குறைக்கு. சம்பளக் குறைப்பு, கூலிக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு,  தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, நிலையான சட்டங்களைப் பிசுபிசுக்க வைப்பது, தொழில் தகராறு தீர்க்க ஒற்றைத் தீர்ப்பாயம் எனக் கூறி மாவட்ட நீதிமன்றங்களை ஒழித்துக் கட்டுவது, குறைந்த பட்ச ஊதியத்திற்கு ஆபத்து ஏற்படுத்துவது, குழந்தைத் தொழிலாளரை அனுமதித்து குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவது, அபாயகரமான தொழில்கள் உள்ள நிறுவனங்களில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெண்களைப் பணியில் ஈடுபட வைப்பது என இந்த நான்கு சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட  பா.ஜ.க. அரசின் வறட்டுப் “போர்ப்பிரகடனமாக” இருக்கிறது. தொழிலாளர்களுக்கு எதிராகவும்- கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் இந்த மத்திய பா.ஜ.க. அரசினை எதிர்த்து, தொழிற்சங்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போர்ப் பிரகடனம் உள்ளபடியே மத்திய பா.ஜ.க. அரசைத் தற்போது கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.


ஆகவே, இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் - இதை ஏதோ தொழிற்சங்கங்கள் மட்டும் எதிர்க்க வேண்டிய சட்டங்கள் என்று கருதிவிடாமல் - தொழிலாளர் நலனில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைத்துக் கட்சிகளும் - அமைப்புகளும் ஒரே அணியில் நின்று ஒரு முகமாகப் போராடிட முன்வர வேண்டும் என்றும்; 26-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்தத்தின் போர்ப் பிரகடனப் பேரெழுச்சி டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  வீழ்வது மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.