Advertisment

ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை; இதில் எங்கே இருக்கிறது காழ்ப்புணர்ச்சி?-பாமக கேள்வி 

bb

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இரண்டு முறை வெளிநாட்டுப் பயணம் சென்ற முதல்வரால் தமிழகத்திற்கு என்னென்ன முதலீடுகள் வந்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''சில பேர் நிறையக் கனவுகளுடன்... நடக்கவே முடியாத கனவுகளோடு இருப்பார்கள். அதனால் அந்த காழ்ப்புணர்வில் சில விமர்சனங்களை வைப்பார்கள். நன்றாக தெரியும் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கு பல முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறது.

Advertisment

nn

இப்பொழுது வெளிநாடு சென்று அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனங்களை எல்லாம் சந்தித்து அவர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். எல்லா விதங்களிலும் தமிழ்நாடு முதலில் இருக்கக்கூடிய மாநிலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் இப்படி வரும் விமர்சனம் என்பது காழ்ப்புணர்வை தவிர வேறொன்றுமில்லை'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்கனிமொழியின் கருத்துக்குபாமக பதில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்திருப்பதாக புள்ளிவிவரங்களுடன் அன்புமணி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்க முடியாத திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, காழ்ப்புணர்ச்சி காரணமாக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அரசியல் சார்ந்த விமர்சனங்களை ஆதாரங்களுடன் எதிர்கொள்வதற்கு பதிலாக அவதூறு பேசும் கலாச்சாரத்திற்கு சகோதரி கனிமொழியும் அடிமையாகியிருப்பது வருத்தமளிக்கிறது.

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டிய தேவை அன்புமணிக்கு இல்லை. அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்காமல், வெறும் ஒப்பந்தங்களை மட்டும் செய்து விட்டு முதலீடு குவிந்து விட்டதாக வெற்று விளம்பரங்களைச் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டால் அதை அம்பலப்படுத்த வேண்டிய கடமை ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவருக்கு உண்டு. அதைத் தான் அவர் செய்து வருகிறார்.அன்புமணிக்கு இருப்பது கடமை உணர்ச்சி தான்.... காழ்ப்புணர்ச்சி இல்லை.

nn

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள். தொழில் தொடங்குவதற்கு உகந்த சீர்திருத்தங்களைச் செய்த மாநிலங்களின் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை ஒரு சீர்திருத்தத்தைக் கூட செய்யவில்லை என்பதால் அந்தப் பட்டியலில் இல்லை. இதை கனிமொழி அவர்களால் மறுக்க முடியுமா? இதில் என்ன காழ்ப்புணர்ச்சி இருக்கிறது?

துபாய்க்கும், ஸ்பெயினுக்கும் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நாடுகளில் இருந்து ரூ.9540 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகதெரிவித்தார். ஆனால், அந்த நாடுகளில் இருந்து ஒரு பைசா முதலீடு கூட தமிழகத்துக்கு வரவில்லை. ஒருவேளை முதலீடு வந்திருந்தால் அதை வெளியிடுங்கள் என்று கேட்கிறோம். இதில் என்ன காழ்ப்புணர்ச்சி?

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாகி விட்டால் ஒரு பேச்சு பேசுவது கனிமொழி அவர்களின் வழக்கம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடுவதாகவும், அதனால் ஏராளமான ஏழைப் பெண்கள் விதவைகள் ஆவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேடைக்கு மேடை முழங்கினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை; மது வெள்ளமாக ஓடுகிறது; பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆகின்றனர்; ஆனால், அது குறித்த வினாக்களுக்கு விடையளிக்காமல் கனிமொழி தவிர்க்கிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

kanimozhi pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe