Advertisment

“பெயரை மாற்ற உரிமை இல்லை..” - சரத் பவார்

“No right to change name..” - Sharad Pawar

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Advertisment

இந்த நேரத்தில் மற்றொரு அதிர்ச்சி தரும் விதமாகச் சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதற்கு சமூக வலைத்தளப் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், “இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டியதிலிருந்தே இந்தியா என்ற சொல் பாஜகவிற்கு கசந்து வருகிறது. வளர்ச்சிமிகு நாடாக இந்தியாவை மாற்றப் போகிறோம் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும் தான் மாற்ற முடிந்து இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டுடன் நேரடியாக தொடர்புடைய ஒரு பெயரால் (இ.ந்.தி.யா கூட்டணி) ஆளும் கட்சிகள் ஏன் கொந்தளிக்கின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியக் கூட்டணியின் மூத்த தலைவர்களின் கூட்டத்திற்கு புதன்கிழமை பிற்பகல் டெல்லியில் இந்த விவகாரங்கள் அனைத்தையும் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும், ஆனால் (நாட்டின்) பெயரை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை. பெயரை யாராலும் மாற்ற முடியாது” என காட்டமாக பேசினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe