No by-election for Srivilliputhur constituency

Advertisment

துக்க வீட்டிலும் ‘அரசியல்’ பேசுவதை யாரால் தடுத்துவிட முடியும்? ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா? என்ற கேள்வி எழ, ‘மறைந்தவர் வெற்றிபெற்றால்தானே இடைத்தேர்தல்?’ என்று வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துவிட்டனர்கூட்டணி கட்சியினர்.

வில்லங்கமான அந்தப் பேச்சின் சாராம்சம் இதுதான் - விருதுநகர் மாவட்டத்தில் திமுக மா.செ.க்களும், அதிமுக மா.செ.க்களும் ஒத்தக் கருத்து உள்ளவர்களாகவும், பகைமை வளர்க்காமல் நட்பு பாராட்டி வருபவர்களாகவும் இருந்து வருவது, தெரிந்த விஷயம்தான். அந்த வகையில், ‘இடைத்தேர்தல் வேறு வந்து நம் பிராணனை வாங்க வேண்டுமா?’ என்று இருதரப்பிலும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். ‘எதற்கும் விலைகொடுக்க முடிந்த ஆளும்கட்சி, இதற்கு தாராளம் காட்டாமலா இருக்கும்? நல்லவிதமாக ‘டீல்’ முடித்து, அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் சூழலை உருவாக்காமல் விட்டுவிடுமா? ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்தது மான்ராஜ்தான். அதிக வாக்குகள் பெறுபவரும் அவராகவே இருப்பார் என்று இப்போதே தீர்மானமாகப் பேசுகின்றனர். வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடந்து, ரிசல்ட் நல்லபடியாக வருமா?’ என்பதுதான்கதர்ச்சட்டைகளின் சந்தேகமாக இருக்கிறது. இயற்கை எய்திவிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் இயல்பான வெற்றியைத் தட்டிப்பறிக்க முயற்சிப்பது, வக்கிர அரசியலின் கொடூர முகமாகவே தெரிகிறது.