என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு! உறவினர்கள் முற்றுகை!

nlc 33

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி எனத் தென்மாநிலங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில கடந்த (07.05.2020) மாலை இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6- இல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் நேற்று முன்தினம் (08.05.2020) நிரந்தர ஊழியர் சர்புதீன் (53) என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த சர்புதீன் குடும்பத்துக்கு 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார்.

இந்நிலையில் அதே விபத்தில் சிக்கிய சண்முகம் என்ற ஒப்பந்தத் தொழிலாளி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒப்பந்தத் தொழிலாளரான சண்முகம் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள், தி.மு.க, பா.ம.க மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

nlc 35

அதையடுத்து நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில் அதிவிரைவு படையினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

என்.எல்.சி நிறுவனத்தின் நிர்வாக கோளாறினாலும், அலட்சியத்தினாலும் ஏற்பட்ட விபத்து என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் மற்றும் உயிரிழந்த குடும்ப நபர் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் என்.எல்.சி நிர்வாகித்திடம் வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கைகளை ஏற்காவிட்டால் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும்எச்சரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கத்தினரிடம் நிர்வாக தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Neyveli nlc
இதையும் படியுங்கள்
Subscribe