பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்; புறக்கணிக்கும் முதலமைச்சர்கள்

Niti Aayog meeting chaired by Prime Minister; Ignorant Chief Ministers

எட்டாவது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் எனும் அமைப்பு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்ற முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி செயல்படுகிறார். ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பர்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை காரணங்களால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தான் கலந்துகொள்ளாதது குறித்து எந்த காரணமும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இவர்களைத் தவிர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலுங்கானா முதலமைச்சர்சந்திரசேகரராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதில் சந்தேகம் எழுந்துள்ளது.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். விக்சித் பாரத் @2047, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு உள்ளிட்ட 8 முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நிதி ஆயோக் அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe