Skip to main content

மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது! ராமதாஸ்

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்திற்காக அப்பகுதி மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை மிரட்டிப் பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சி பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தால் முறியடிக்கப் பட்ட நிலையில், அந்த நிலங்களைப் பறிக்கும் முயற்சியை என்.எல்.சி மீண்டும் தொடங்கியுள்ளது. அப்பாவி ஏழை மக்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றி நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.

 

என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலியில் இரு அனல் மின்நிலையங்கள் & அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் 2990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுக்கு நிலக்கரி வழங்குவதற்காக இரு நிலக்கரி சுரங்கங்கள், முதல் சுரங்கத்தின் விரிவாக்கம் என மொத்தம் மூன்று சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
 

Ramadoss



அவை போதாதென ‘மூன்றாவது சுரங்கம்’ என்ற பெயரில் புதிய நிலக்கரி சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த கடந்த 2018-ஆம் ஆண்டில் என்.எல்.சி பணிகளைத் தொடங்கியது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் 26.12.2018 அன்று நெய்வேலியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும்  பணியை நிறுத்தி வைத்திருந்த என்.எல்.சி நிறுவனம், இப்போது மீண்டும் அந்த பணியைத் தொடங்கியிருக்கிறது.
 

மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அந்த கிராமங்களில் வாழும் 8751 குடும்பங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார்கள் என்பது தான் இந்த திட்டத்தைப் பாட்டாளி  மக்கள் கட்சி எதிர்க்க காரணம் ஆகும். ஆனால், இப்போது நிலம் கையகப்படுத்துதல் திட்டத்தின் மீது  இனிப்பு தடவி, மக்களின் ஆசையைத் தூண்டி அவர்களை ஏமாற்ற என்.எல்.சி நிறுவனம் சதி செய்கிறது.
 

மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ள என்.எல்.சி நிறுவனம், அதற்காகத் தாக்கல் செய்துள்ள சமூகத் தாக்க ஆய்வறிக்கையில் ஆசை வார்த்தைகளைத் தூவியிருக்கிறது. பாதிக்கப்படும் 8751 குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய சட்டப்படியான இழப்பீட்டுடன் சேர்த்து, மறுவாழ்வு & மறுகுடியமர்த்தல் உதவியாக தலா ரூ.11.13 லட்சம் வழங்கப்படும் என்று என்.எல்.சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மக்களிடம் மனமாற்றம் ஏற்படும் என என்.எல்.சி கருதுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை என பா.ம.க குற்றஞ்சாட்டுகிறது.


 

 

நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நிலங்கள் மற்றும் வீடுகள்  முழுமையாகக் கையகப்படுத்தப்படும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் விருத்தாசலத்தை அடுத்த எருமனூர், சின்ன பண்டாரம் குப்பம், காணாது கண்டான், கோபுராபுரம் ஆகிய அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில்   குடியமர்த்தப்படுவார்களாம். அவர்களிடமிருந்த வீட்டையும், வாழ்வாதாரங்களையும் பறித்துக் கொண்டு, எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் அவர்களின் இழப்புக்கு ஈடாகாது. இதுவரை கண்ணியம், சுயமரியாதையுடன் கம்பீரமாக விவசாயம் செய்து வாழ்ந்தவர்கள், இனி புதிதாக குடியமர்த்தப்படும் கிராமங்களில் அகதிகளாக வாழ்வர். அவர்களால் வருவாய் ஈட்ட முடியாது. நிலத்தைக் கொடுத்ததற்காக கிடைத்த பணத்தை சில ஆண்டுகளில் செலவழித்து விட்டு, பின்னர் வறுமையில் தான் வாடுவார்கள். மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை கண்களை விற்று சித்திரம் வாங்கியோரின் நிலையாகவே இருக்கும்.
 

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும். மலைக்காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும்  இந்த நிலங்களில் விளையும். இப்போது கூட அந்நிலங்களில் நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் இப்போது கூட விளைகின்றன. ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறிக்கத் துடிப்பது உழவுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.


 

 

அதுமட்டுமின்றி, நிலம் வழங்குவோருக்கு அளிக்கும் வாக்குறுதிகளை என்.எல்.சி எந்தக்காலத்திலும் நிறைவேற்றியதில்லை. 1950-ஆவது ஆண்டுகளில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 62 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்வாறு தியாகம் செய்த மக்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் என்.எல்.சி நிறுவனம் இப்போது அளிக்கும் வாக்குறுதியை நம்புவது என்பது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழும் செயலுக்கு சமமானதாகும். இதற்கு 26 கிராம மக்கள் உடன்பட மாட்டார்கள்.
 

இதற்கெல்லாம் மேலாக விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தபடவில்லை. 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் சுரங்கம் அமைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, இப்போது இன்னும் கூடுதலாக நிலங்களைக் கைப்பற்றி விவசாயத்தை அழிக்க என்.எல்.சி துடிப்பதை அனுமதிக்க முடியாது.
 

எனவே, யாருக்கும் தேவையில்லாத, வேளாண்மைக்கும், இயற்கைக்கும் எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை என்.எல்.சி கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை என்.எல்.சி நிறுவனத்திற்கு எடுத்துக் கூறி, இந்தத் திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.