Skip to main content

தேர்தல் அதிகாரிக்கு கூடுதல் பதவி! அதிர்ச்சியில் ஐ.ஏ.எஸ்.கள்! 

Published on 23/04/2018 | Edited on 23/04/2018

தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி, அப்பணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரு மாதங்களுக்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்டார். புதிய தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்யபிரதாசாகுவை நியமித்தது இந்திய தேர்தல் ஆனையம்.   

 

Satya

 

மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் பதவி காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களாக அப்பதவி நிரப்பப்படவில்லை. இந்தநிலையில், தற்போது அப்பதவியை சத்யப்பிரதாசாகுவிடமே கூடுதல் பொறுப்பாக கொடுத்துள்ளது எடப்பாடி அரசு. இத்தகைய முடிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

இதுகுறித்து நம்மிடம், "தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி என்பவர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். தலைமைத் தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் தன்னிச்சையாக இயங்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு அவர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரமாட்டார். இப்படிப்பட்ட நிலையில், தமிழக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்யப்பிரதாசாகுவிடம் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தைக் கூடுதல் பொறுப்பாக தந்திருப்பது தவறானது. மேலும், தேர்தல் அதிகாரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2018)  கூடுதல் பொறுப்பை மிக ரகசியமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் சத்யபிரதாசாகு. அவரிடம் கூடுதல் பொறுப்பு தரப்பட்டிருப்பது தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.  இதன் பின்னணியில் பல வில்லங்கங்கள் இருக்கிறது" என்கிறார்கள் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

 

விரைவில் பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது ரகசியமாக நடந்திருக்கும் இந்த விவகாரம்.

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? - தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Explanation of the Chief Electoral Officer Will action be taken against Nayanar Nagendran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்த பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும். ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களும் அறிக்கை அளிப்பார்கள்” என்று கூறியுள்ளார். 

Next Story

தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Chief Election Commissioner visits Tamil Nadu

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும், இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தமிழகம் வருகிறார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.