Skip to main content

புதிய கல்விக் கொள்கை மாநில கல்வி உரிமையைப் பறிக்கும் செயல்: கே.பாலகிருஷ்ணன்!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
Chidambaram

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், தமிழக முதலமைச்சர் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் தமிழக முதல்வருக்கு தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிகாட்டி அதனை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதனடிப்படையில் அவர் அறிவித்துள்ளது வரவேற்கக் கூடியது.

 

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.  3, 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வைக் கொண்டு வந்துள்ளனர். இது நமது கல்வி கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையையாக உள்ளது.

 

கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் பொதுப்பட்டியலில் இருப்பது.  அதனைத் தற்போது  மத்திய அரசு மட்டுமே தீர்மானிக்கக் கூடியதாக அறிவித்துள்ளனர்.  மாநில அரசின் கல்விக்கொள்கை அறவே நிராகரிக்கப்பட்டுள்ளது.  ஒரே மாதிரியான கல்விக் கொள்கை ஏற்புடையதல்ல, பல கலாச்சாரம், பலமொழிகள், பல வரலாற்றுப் பின்னணி கொண்ட கல்வியில் பன்முகத் தன்மையைச் சீரழித்து மாநில உரிமையைப் பறிக்கும் செயலாக இது உள்ளது.

 

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்போது 10 பள்ளிகளை ஒன்றாக இணைத்து வளாகம் அமைத்து அதனைத் தனியாரின் கட்டுப்பாட்டில் விடுவது என்பது  கல்வியை ஒழித்து தனியாரிடம் ஒப்படைக்கும் செயலாகும். ஏற்கனவே தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை ஒழிக்கும் செயல்கள் அறங்கேறி வருகிறது. தற்போது  புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடவில்லை.  தமிழக அரசு அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஒட்டுமொத்த புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசிடம் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்ககூடாது.

 

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் இ-பாஸ் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர். இ-பாஸ் வாங்குவதில்  பல சிக்கல்கள் உள்ளது.  ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் எளிதாக இ-பாஸ் கிடைக்கிறது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.  ஒரு மகள் தாயின் உடல்நிலை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் போது பார்ப்பதற்கு இ-பாஸ் அனுமதி கேட்டால் இறந்தால்தான் அனுமதி என்றால் எந்த விதத்தில் நியாயம்? எனவே தான் இந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.

 

அதேநேரத்தில்  வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு டெஸ்ட் எடுத்து அனுமதிக்கலாம், கண்காணிக்கும் நடை முறையை அமல்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஊரடங்கு என்பது நோய்த்தொற்றை அதிகபடுத்த வாய்ப்பாக உள்ளது. ஞாயிறு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று அனைத்துக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.  இதனால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதை ரத்து செய்ய வேண்டும்.

 

பொதுப் போக்குவரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்க வேண்டும். இந்த மாதம் 25ஆம் தேதி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுங்கள். இல்லையேல் ஊரடங்கை ரத்து செய்யுங்கள். எதையும் செய்யாமல் ஊரடங்கை மட்டுமே அமல்படுத்துவோம் என்றால்  மார்க்சிஸ்ட் கட்சி  தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர்  உடன் இருந்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.