Skip to main content

புதிய கல்விக் கொள்கை மாநில கல்வி உரிமையைப் பறிக்கும் செயல்: கே.பாலகிருஷ்ணன்!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
Chidambaram

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், தமிழக முதலமைச்சர் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் தமிழக முதல்வருக்கு தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிகாட்டி அதனை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதனடிப்படையில் அவர் அறிவித்துள்ளது வரவேற்கக் கூடியது.

 

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.  3, 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வைக் கொண்டு வந்துள்ளனர். இது நமது கல்வி கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையையாக உள்ளது.

 

கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் பொதுப்பட்டியலில் இருப்பது.  அதனைத் தற்போது  மத்திய அரசு மட்டுமே தீர்மானிக்கக் கூடியதாக அறிவித்துள்ளனர்.  மாநில அரசின் கல்விக்கொள்கை அறவே நிராகரிக்கப்பட்டுள்ளது.  ஒரே மாதிரியான கல்விக் கொள்கை ஏற்புடையதல்ல, பல கலாச்சாரம், பலமொழிகள், பல வரலாற்றுப் பின்னணி கொண்ட கல்வியில் பன்முகத் தன்மையைச் சீரழித்து மாநில உரிமையைப் பறிக்கும் செயலாக இது உள்ளது.

 

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்போது 10 பள்ளிகளை ஒன்றாக இணைத்து வளாகம் அமைத்து அதனைத் தனியாரின் கட்டுப்பாட்டில் விடுவது என்பது  கல்வியை ஒழித்து தனியாரிடம் ஒப்படைக்கும் செயலாகும். ஏற்கனவே தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை ஒழிக்கும் செயல்கள் அறங்கேறி வருகிறது. தற்போது  புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடவில்லை.  தமிழக அரசு அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஒட்டுமொத்த புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசிடம் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்ககூடாது.

 

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் இ-பாஸ் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர். இ-பாஸ் வாங்குவதில்  பல சிக்கல்கள் உள்ளது.  ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் எளிதாக இ-பாஸ் கிடைக்கிறது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.  ஒரு மகள் தாயின் உடல்நிலை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் போது பார்ப்பதற்கு இ-பாஸ் அனுமதி கேட்டால் இறந்தால்தான் அனுமதி என்றால் எந்த விதத்தில் நியாயம்? எனவே தான் இந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.

 

அதேநேரத்தில்  வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு டெஸ்ட் எடுத்து அனுமதிக்கலாம், கண்காணிக்கும் நடை முறையை அமல்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஊரடங்கு என்பது நோய்த்தொற்றை அதிகபடுத்த வாய்ப்பாக உள்ளது. ஞாயிறு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று அனைத்துக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.  இதனால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதை ரத்து செய்ய வேண்டும்.

 

பொதுப் போக்குவரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்க வேண்டும். இந்த மாதம் 25ஆம் தேதி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுங்கள். இல்லையேல் ஊரடங்கை ரத்து செய்யுங்கள். எதையும் செய்யாமல் ஊரடங்கை மட்டுமே அமல்படுத்துவோம் என்றால்  மார்க்சிஸ்ட் கட்சி  தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர்  உடன் இருந்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்