Advertisment

சென்னை புதிய விமான நிலையம் வருமா... வராதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

New airport

சென்னை புதிய விமான நிலையம் வருமா? வராதா? என தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். புதிய விமான நிலையம் அமைப்பது சென்னையின் உடனடித் தேவை எனும் நிலையில் முதலமைச்சரும், விமான நிலைய அதிகாரிகளும் கூறியுள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பது குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment

சென்னை விமான நிலையம் பயணியர் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றில் அதன் முழுத் திறனையும் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்பதால் அதற்குள்ளாக புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது அவசியமாவதாகவும், அதற்குள் சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருந்தார்.

ஆனால், அதற்கு இரு நாட்கள் முன்பாக கடந்த 28-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக தெரிவித்தார். திருப்பெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருந்ததாகவும், அதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை என்பதால் தான் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். புதிய விமான நிலையம் அமைக்கப்படாததால் அதிகரிக்கும் பயணியர் நெரிசலை சமாளிப்பதற்காகத் தான் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளதாகவும் சந்திரமவுலி தெரிவித்தார்.

ramadoss

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை; அதனால் தான் புதிய விமான நிலையம் கைவிடப்பட்டு விட்டது என்று விமான நிலைய இயக்குனர் கூறுகிறார். ஆனால், 2024-ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறுகிறார். இந்த இருவரில் யாருடைய கூற்றை நம்புவது? என்பதில் தான் குழப்பம் நிலவுகிறது,

திருப்பெரும்புதூரில் புதிய விமானநிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது உண்மை. ஆனால், பல ஆண்டுகளாகியும் விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசால் கையகப்படுத்தித் தர முடியவில்லை. ஒரு கட்டத்தில் கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர் ஆகிய 4 பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவற்றில் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது திடீரென புதிய விமான நிலையம் அமைக்கப்படாது என்று மத்திய அரசு கூறினால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்தியாவில் சாதாரண நகரங்களில் கூட இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் இன்னும் புதிய விமான நிலையம் அமைக்கப் படவில்லை. சென்னைக்கு வந்து செல்லும் பயணியர் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் புதிய விமான நிலையம் கண்டிப்பாகத் தேவை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். திருப்பெரும்புதூரில் புதிய விமான நிலையத்திற்காக 7 கி.மீ. நீளத்திற்கும், 4 கி.மீ. அகலத்திற்கும் பறந்து விரிந்து கிடக்கும் 7,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திருப்பெரும்புதூரை விட சிறந்த இடம் இல்லை என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கூறி விட்ட பிறகும் அங்குள்ள இடத்தை கையகப்படுத்திக் கொடுக்காதது ஏன்? என்பதை மாநில ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

ஒருவேளை திருப்பெரும்புதூரில் நிலம் கையகப்படுத்த முடியவில்லை என்றால் உத்திரமேரூர், மதுராந்தகம், கும்மிடிப்பூண்டி ஆகியவற்றில் எங்காவது விமான நிலையம் அமைக்கலாம் எனும் சூழலில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுவது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இது இப்படியென்றால், 2024&ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று எந்த அடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என விளக்கம் வேண்டும்.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசர, அவசியத் தேவை ஆகும். அதில் குழப்பங்கள் நிலவும் நிலையில், புதிய விமானம் வருமா.... வராதா? என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். புதிய விமான நிலையம் வருகிறது என்றால் அது எங்கு அமையும்? அதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு விட்டதா? அப்படியானால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கி எப்போது நிறைவடையும்? என்பதையும் முதலமைச்சர் விளக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Ramadhoss Chennai airport new
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe