Advertisment

நீட் தேர்வை நடத்த முடியாது என தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

mk stalin

Advertisment

சட்டப்பேரவையின் சிறப்புகூட்டம் நடத்தி, நீட் தேர்வை நடத்த முடியாது எனத் தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு எதிரான நீட் தேர்வு முற்றாக கைவிடப்பட வேண்டும் என்பதிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பின்பற்றியவாறு, பனிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையிலும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதி அடிப்படையான இந்த கருத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

Advertisment

பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி இரு சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில், பா.ஜ.க.,வுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே, அ.தி.மு.க. அரசு பரிதாபமாக படுதோல்வி அடைந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை, சுயநல நோக்கில், நாடாளுமன்றத்தில் ஆதரித்தபோதும்கூட, அ.தி.மு.க. அரசு நீட் சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து ஒப்புதல் பெறுவதில் கோட்டை விட்டுவிட்டு, தமிழக மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்து விட்டது.

நீட் தொடர்பான மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர மறுத்து, அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன என்ற தகவல்கள் ஆதாரபூர்வமாக வெளியான போதும், அதை மூடி மறைப்பதிலேயே முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அரசு குறியாக இருந்தது. சமூகநீதியிலோ, ஏழை மாணவர்கள் நலனிலோ துளியும் அக்கறையற்ற அ.தி.மு.க. அரசு, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்குத் தேவையான முயற்சிகளை எடுக்காமல், திசைதிருப்பும் செயலிலேயே மாதங்களைக் கடத்தி விட்டது. சட்டமன்றப் பேரவையிலும்கூட உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்து தமிழக மக்களின் கண்களில் மண்ணைத் தூவ முனைந்தது.

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி, மூன்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்தச் சட்ட மசோதாக்களின் தற்போதைய கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று இனியும் மவுனம் சாதிக்கக்கூடாது.

கரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் தருணத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாடு அரசோ, முதலமைச்சரோ இந்த தலையாய பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் பாராமுகமாக இருந்து வருவதில் இருந்தே அவர்களுடைய உள்நோக்கம் ஊருக்கு தெரிந்துவிட்டது .

பனிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முனைப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கப்போகிறது என்பதில் நிலவும் குழப்பம் காரணமாக, இலட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் உள்ளனர். புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டி, அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான அனுமதி தொடங்கும் என்று சொல்லி, பிரச்சினையைத் திசை திருப்ப முதல்வர் பழனிசாமி எடுக்கும் முயற்சி, தமிழக மாணவ - மாணவியரிடம் நிச்சயம் பலிக்காது.

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாகக்கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, பனிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்கச்செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறேன்.

நீட் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதில் அடைந்த படுதோல்வியை மூடிமறைக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. "இது குறித்து அவசரச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று முதலமைச்சர் நேற்று திடீரென அறிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டது ஏன்?

ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் பல ஆண்டுகளாக குளிர்பதனப் பெட்டியில் தூங்கி கொண்டிருப்பதைப் போல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு முடிவும் அமைந்துவிடத் தமிழக அரசு அனுமதிக்க போகிறதா அல்லது மாநில அரசின் உரிமையைச் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து தட்டிக் கேட்கப்போகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளத் தமிழ்நாடே ஆவலாக இருக்கிறது.

பல்லாயிரம் கோடி டெண்டர், கொள்முதல் விவகாரங்களில் ஒவ்வொரு மாவட்டமாக ஓடோடிச் சென்று காட்டும் தீவிரத்திலும் அக்கறையிலும் கோடியில் ஒரு பங்கையேனும் மாணவர்கள் நலனில் காண்பிக்க முதலமைச்சர் பழனிசாமி முன்வர வேண்டும். இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை பனிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்”இவ்வாறு கூறியுள்ளார்.

neet exam mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe