K. Veeramani  Dravidar Kazhagam

ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வேடு பல்கலைக் கழகங்களிலேயே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஊழலும், குழப்பமும் நிறைந்த ‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்! இப்பொழுது தேவையெல்லாம் மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் பெருக்குவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கரோனா தொற்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு மிகுந்த துன்பத்தையும், துயரத்தையும், அச்சத்தையும், அதே நேரத்தில் பொருளாதார பாதிப்பையும், நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையுமே புரட்டிப் போட்டுள்ள இன்றைய நிலையில், கல்வித்துறை - குறிப்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒன்றுமே நடவாததுபோல், வழக்கமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன!

Advertisment

JEE - மெயின் போட்டி, ‘நீட்’ தேர்வு என்ற மருத்துவக் கல்லூரிக்கான புதிதாக திணிக்கப்பட்ட தேர்வு, ஆகியவைகளுக்கான கடைசி வாய்ப்பு என்றெல்லாம் H.R.D. அமைச்சரின் டிவிட்டரில் அறிவிப்புகள் வருகின்றன. எங்கெங்கு தேர்வு மய்யங்கள் அமையும் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளேட்டில்

அதே நேரத்தில் கல்வியில் வெகுவாக முன்னேறிய நாடாகக் கருதப்படும் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு, இம்பீரியல் காலேஜ், லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், அமெரிக்காவில் உள்ள வார்ட்டன், கெல்லாக், கர்னிஜி, மெல்லோன் முதலிய பிரபல கல்லூரிகளில் ‘G-MAT / GRE’ என்ற நுழைவுத் தேர்வை வற்புறுத்தாமல் மாணவர்களைச் சேர்ப்பது என்ற முடிவுகள் குறித்து நேற்றைய ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளேட்டில் ஒரு முக்கியச் செய்தி வந்துள்ளது.

Advertisment

அமெரிக்காவின் யூசி பெர்க்கிலி பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டு அவர்களது பல்கலைக் கழகத்தில் படித்த கீழ் வகுப்பான பட்டதாரி வகுப்பில் படித்தவரை நுழைவுத் தேர்வு ‘G-MAT / GRE’ வேலை அனுபவம் (இது ஒரு முன்தேவை) இன்றியே மேற்பட்டப் படிப்புக்குச் சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்கின்றனராம்!

நுழைவுத் தேர்வு பற்றியே கவலைப்படாமல் மாணவர்களைச் சேர்க்க முடிவு

Harvard Business School என்ற பிரபல ஹார்வேடு தொழில் படிப்புதனையும்கூட பல்கலைக் கழகம் 2021ஆம் ஆண்டுக்கான இம்மாதிரி புதிய மாணவர் சேர்க்கைத் திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டுள்ளதாம்!

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் கேரி பிசினஸ் ஸ்கூல் என்ற பிரபல தொழிற்படிப்பு நிறுவனமும் கூட 'G-MAT/GRE' நுழைவுத் தேர்வு பற்றியே கவலைப்படாமல் மாணவர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளதாம்!

சில ஆண்டுகளுக்காவது தள்ளிப் போடலாமே!

இங்கே அவர்களைப் பார்த்து உலகத் தரத்திற்கு உயர்த்திய JEE, NEET - நீட் என்ற நுழைவுத் தேர்வுகள் என்பதன்மூலம் கார்ப்பரேட் கொள்ளையும், சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்து, மாணவர்கள் கேள்வித்தாள் குளறுபடிகள் முதல் ஆள் மாறாட்ட ஊழல் வரையும் ஏராளம் நடந்து, உயர்நீதிமன்றங்களே இதுபற்றி பல்வேறு ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், முற்றிலும் அரசமைப்புச் சட்ட உரிமைகளை மாநிலங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் பறிக்கின்ற இந்த ‘நீட்’ தேர்வை - இந்த கரோனா கொடூரத்தினாலாவதுஅந்த வெளிநாடுகளைப் போல சில ஆண்டுகளுக்காவது தள்ளிப் போடலாமே!

இந்த நோயின் வேகமும், தாக்கமும் அதன் காரணமாக பொருளாதாரத் துறையில் தேக்கமும் உள்ள நிலையில், மக்களின் வாழ்வைத் திரும்ப இயல்பு நிலை - பழைய நிலைக்குக் கொண்டு வரும்வரையிலாவது, இதை வலியுறுத்தாமல், கரோனா போன்ற தொற்றைத் தடுக்க மக்களின் நல்வாழ்வுத் துறை - மருத்துவத் துறைகளின் அடிக்கட்டுமானத்தை இந்த வாய்ப்பில் விரிவுபடுத்தலாமே!

மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதில் அவ்வப்போது அமெரிக்கா மாதிரி அவர்களை தர ஆராய்வு செய்து உயர்த்துவது தொடரும் நிலையில், முந்தைய முறை போல் மாநிலங்களில் சேருவதற்கு ஏற்பாடு செய்யலாம்! செய்ய வேண்டும்.

அடிக்கட்டுமானத்தை வலிமையடையச் செய்தலே முக்கியம்!

இப்போது நாட்டிற்குத் தேவை புதிய பொருளியல் ஆராய்ச்சிகளின் வெற்றியே, செவிலியர்கள் - நர்சிங் பயிற்சி கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், Para Medical Staff என்ற மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் இவர்களை ஏராளம் பெருக்கும் வகையில் உடனடியாக சுகாதார அடிக்கட்டுமானத்தை வலிமையடையச் செய்வதே ஆகும்.

http://onelink.to/nknapp

மக்கள் நலனுக்கும், நல்வாழ்வுக்குமே முன்னுரிமை

இந்த ‘நீட்’ தேர்வு என்ற ஊழல் மலிந்த, ஏனைய பாடத்திட்டங்களின் அறிவு வறட்சியை ஏற்படுத்துகின்ற இவற்றை மாற்றிட துணிய வேண்டும். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இல்லாத - அவர்கள் கவலைப்படாத கல்வித் தரம் என்ற ‘மாய வடிவம்‘ நமக்கெதற்கு? மக்கள் நலனுக்கும், நல்வாழ்வுக்குமே முன்னுரிமை இப்போது. மக்கள் நலன் அரசுகளுக்கு இருப்பின் சிந்திக்க வேண்டும்.