Advertisment

“அ.தி.மு.க. அரசின் நீட் எதிர்ப்பு வெறும் நாடகம்!" -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

dmk

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (14.09.2020) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர், "இன்று சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்ச்சியாக, மறைந்த தலைவர்களுக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் குடியரசு தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

dmk

அந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, நான் எழுந்து சபாநாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன். இங்கு பலரது மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ - மாணவிகள், தற்கொலை செய்துகொண்டு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

எனவே இந்த இரங்கல் தீர்மானத்தில் அவர்களுடைய பெயர்களையும் சேர்த்துதீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது அந்தகோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது.

இன்னும் 2 நாட்கள்தான் சட்டமன்றம் நடைபெறவிருக்கிறது என்று அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்திருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருக்கிறார். அதன்படி நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் மட்டும்தான் சபை நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைத்தலைவர் துரைமுருகன், 'இந்த இரண்டு நாட்கள் போதாது, நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே அவை குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும், கருத்துகளை எடுத்துச்சொல்ல வேண்டும்' என்று எவ்வளவோ வற்புறுத்தியும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே 15, 20 கவன ஈர்ப்புத் தீர்மானங்களையும், தனித் தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அளித்திருக்கிறோம். தொடர்ந்து மேலும் பல தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கோரி நோட்டீஸ் தந்து கொண்டு இருக்கிறோம். எப்படி இந்த 2 நாட்களில் அவற்றையெல்லாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறார்களாஎன்பது கேள்விக்குறியாக உள்ளது. முக்கியமாக நீட் பிரச்சினை; அதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமையைப் பற்றி எல்லாம் பேசவேண்டும். அடுத்து புதிய கல்விக் கொள்கை; அதேபோல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை; இவை குறித்தெல்லாம் சபையில் பேசி விளக்கம் பெறவேண்டும். எங்களுடைய கருத்துகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்று, கவன ஈர்ப்புத் தீர்மானங்களாக எடுத்துக் கொள்ளக்கோரி நோட்டீஸ் அளித்து இருக்கிறோம்.

இதைத் தவிர்த்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள். இந்த 2 நாட்களில் அவற்றை எப்படி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது " என்றார்.

அப்போது, "நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் இயற்றி உள்ளார்கள். சட்டமன்றத்திலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதிலேயும் ஒப்புதல் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு நாடகம்; மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம். ஆனால் இதுவரைக்கும் ஒருமுறைகூட இதற்காக முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ டெல்லிக்குச் சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ இதுகுறித்து வலியுறுத்தவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு; போதிய அழுத்தம் தரவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆகவே இது உண்மையிலேயே கூனிக்குறுகி போயிருக்கக்கூடிய அடிமை ஆட்சியாக; மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்றார் மு.க.ஸ்டாலின்

admk neet exam issue tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe