/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/501_31.jpg)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு கடந்த ஒரு மாத காலமாக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த மசோதா கடந்த சட்டப்பேரவையில், செப்டம்பர் 15 இல், நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரி வருகின்றன. ஆனால் ஆளுநர் இந்த மசோதா குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதன் மூலம் மத்திய பா.ஜ.கஅரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.
இப்பிரச்சனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருபாகரன் "கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 11 பேருக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது" என்கிற அதிர்ச்சி தகவலை மனுதாரர் கூறியபோது மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் "இந்த சட்டமசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு மாத கால அவகாசம் போதாதா" என்று குறிப்பிட்டு "ஏழை, ஏளிய கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே கிடையாதா?" என்று கூறி நீதியரசர் கிருபாகரன் கண்கலங்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த காலங்களில் நீட் தேர்வு நடத்துவதற்கு முன்பு தமிழ்வழி கல்வி படித்தவர்களில் 2015 - 16 இல் 456 மாணவர்களுக்கும், 2016-17 இல் 438 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு 2017-18 இல் அந்த எண்ணிக்கை 40 ஆக குறைந்தது. இதன்மூலம் 90 சதவீதம் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல தேர்வு எழுதுகிற மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இதன்மூலம் அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்வு மூலம் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் அரசுப்பள்ளிகளில் படித்த 300 முதல் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
தமிழகத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய412 பயிற்சி மையங்களில் பயின்ற 19,000 அரசுப்பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை. இதைவிட ஒரு அவமானம் தமிழக அரசுக்கு வேறு இருக்கமுடியுமா? நீட் பயிற்சி மையங்களை தொடங்கிய தமிழக அரசு தகுதியான ஆசிரியர்களை நியமிக்காததால் தான் இத்தகைய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பாகும்.
எனவே, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். அப்படி ஒப்புதல் வழங்குகிற வரை, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடரக்கூடாது என வலியுறுத்த விரும்புகிறேன். தமிழக ஆளுநர் தொடர்ந்து ஒப்புதல் வழங்காமல் அலட்சியப்போக்கோடு செயல்படுவாரேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கவிரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)