Skip to main content

“நட்டாவின் பொய் குற்றச்சாட்டு புறப்பட்ட இடத்திலேயே வீழ்ந்துவிட்டது..” - ஆர்.எஸ். பாரதி 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"Natta's false accusation fell..." - R.S. Bharti

 

திருப்பூரில் கடந்த 24ஆம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டார். அதில் அவர், “குடும்ப ஆட்சிக்கு, அரசியலுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே. திமுக கட்சி தமிழக மக்களின் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற முயல்கிறது. குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. மிகத் தெளிவான உண்மையைச் சொல்கிறேன்” என்று பேசியிருந்தார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. பதிலளித்துள்ளார். 

 

அவர் தெரிவித்திருப்பதாவது, “பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று ‘திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது கூட்டணிக் கட்சியிலிருந்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்ப்பதை திசை திருப்பி, எங்கே நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணியும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே நடைபெறும் திமுக ஆட்சியைப் பார்த்து குறை கூறுவது வியப்பளிக்கிறது.

 

பல வாரிசுகளை உருவாக்கி, அவர்களை சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி, நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்துவரும் பாஜக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி ஆட்சியைப் பற்றி ‘வாரிசு அரசியல்’ என்று கூறுவது வெட்கக்கேடானது. பாவம் அவருக்கு எதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்று புரியவில்லை. எந்த வழியில் பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாடு மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார்.

 

பத்தாண்டு காலம் அரசு நிர்வாகத்தைப் பாழ்படுத்தி, ஊழல், நிர்வாக சீர்கேடு என தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய அதிமுகவை அருகில் வைத்துக்கொண்டு ‘நிர்வாகம்’ குறித்து திமுகவிற்கு பாடம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஜே.பி. நட்டா. திமுக ஆட்சி இருந்தபோதெல்லாம் தமிழ்நாடு எத்தகையை முன்னேற்றம் கண்டது என்பதன் அடையாளம்தான் அத்தனை சதிகளையும் முறியடித்து தமிழ்நாட்டு மக்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு அளித்த மாபெரும் வெற்றி. அதை நட்டா உணர வேண்டும். பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் ‘நிர்வாக சீர்கேடு’ குற்றச்சாட்டு எத்தகையது என்பதற்கு நாம் பதில் சொல்வதைவிட, இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில் 2ஆம் பக்கத்தில் அவருடைய செய்தியைப் பிரசுரித்து அதிலேயே ‘நிர்வாக சீர்கேடு என்பதற்கு நட்டா எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை’ என்று முன்னுரை கொடுத்து பிரசுரித்துள்ளது. நட்டாவின் பொய்க் குற்றச்சாட்டு புறப்பட்ட இடத்திலேயே வீழ்ந்துவிட்டது. அவரது பேச்சுக்கு ஆதாரம் இல்லை என அந்த ஆங்கில பத்திரிகையே பட்டவர்த்தனமாக கூறிவிட்டது.

 

மழை வெள்ள சேதங்களை தினமும் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கி, பணிகளை முடுக்கிவிட்டது நமது முதலமைச்சர் மட்டுமே. அப்படியொரு முதலமைச்சர் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே இல்லை என்பதை ஏனோ நட்டா வசதியாக மறந்துவிட்டது வேதனையளிக்கிறது. ஆகவே நல்லாட்சி வழங்கி, தமிழ்நாட்டு மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று பணியாற்றும் முதலமைச்சரைக் கொண்ட திமுக ஆட்சியைப் பார்த்த அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நட்டா பேசுவது தன் கட்சி முதுகில் இருக்கும் அழுக்கை மறைக்கவா அல்லது விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடக்கம் தொட்டே திமுகவின் ஆதரவும், போராட்டங்களும், ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களும் காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆதங்கமா என்று புரியவில்லை. ஆகவே நட்டா அரசியல் விழாக்களுக்கு வரும்போது ‘பொய் மூட்டைகளை’ அவிழ்த்துக் கொட்டுவதைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.