ks alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைவதற்கு எதிராக தமிழக மக்கள் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குமொத்தமுள்ள 39 தொகுதிகளில், 38 இடங்களில் அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்தனர்.

Advertisment

இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. தமிழகத்தில் வேரூன்ற பல்வேறு உபாயங்களை கையாண்டு கடும் தோல்வியே சந்தித்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களை பாதிக்கின்ற வகையில் இருப்பதால் மோடி அரசையும், பா.ஜ.க.வையும் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள்.

Advertisment

இந்நிலையில் தமிழக பா.ஜ.க. வை மீட்டெடுக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன்களை பெற்றுத் தருவதற்கு தமிழக பா.ஜ.க.வின் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தலைமையில் புதிய குழு ஒன்றை தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் அமைத்திருப்பது குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. கடன் பெற விரும்புகிறவர்களிடமிருந்து மனுக்களை பெறுவதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று தர தீவிர முயற்சிகள் இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கடன் மனுக்களை பெற்று ஆய்வு செய்து தலைமைகுழுவிற்கு அனுப்பி அவர்கள் மூலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழக பா.ஜ.க.வின் கடன் மனுக்களை ஆய்வு செய்து பரிந்துரை செய்கிற குழுவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையின் பேரில்தான் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் உயரதிகாரிகளுக்கு வாய்மொழி மூலமாக இது கூறித்து நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி, தமிழ்நாடு பா.ஜ.க. அமைத்துள்ள குழு, கடன் மனுக்களை ஆய்வு செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுமென்று நிதியமைச்சகம் செய்துள்ள பரிந்துரையின்படி, இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. குழு அமைக்கப்பட்ட ஒரிரு நாட்களிலே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.

தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு கடன் பெற்று தருகிற முயற்சியில் தமிழக பா.ஜ.க. தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்தெடுக்க முடியுமென்று நம்பிக்கையோடு இத்தகைய அணுகுமுறையை கையாண்டு இருக்கிறது. ஆனால் இந்த முயற்சிகள் தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக பா.ஜ.க. அமைத்துள்ள குழுவின் மூலமாகத்தான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியும் என்ற நிர்பந்தமான நிலை இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதே முறையை மற்ற அரசியல் கட்சிகளும் கையாண்டால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரவேற்பு கிடைக்குமா? பரிந்துரை ஏற்கப்படுமா? கடன் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்குமா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. தமிழக பா.ஜ.க. வுக்கு வழங்கப்படுகிற வாய்ப்பு மற்ற அரசியல் கட்சிகளுக்கு நிச்சயமாக வழங்கப்படாது.

இத்தகைய பாரபட்சபோக்கை அனுமதிப்பதன் மூலமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தமிழக பா.ஜ.க. வின் பரிந்துரையின்படி, செயல்பட வைப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் என்பது அனைத்து மக்களும் பொதுவானது. மக்கள் செலுத்திய டெபாசிட் அடிப்படையில் இயங்குகிற வங்கிகளில் ஒரு அரசியல் கட்சிக்கு பாரபட்சம் காட்டுவதால் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். மக்களின் டெபாசிட் தொகைக்கான பாதுகாப்பு பறிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சர் திரு ப. சிதம்பரம் அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்களுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டது. இந்த கல்விக்கடன் பெறுவதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக பா.ஜ.க. அமைத்ததைபோல எந்தக்குழுவும் அமைக்கப்படவில்லை. எந்த மனுக்களையும் பெற்று, ஆய்வு செய்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யவில்லை.

கடந்த ஆட்சிகாலத்தில் கடைபிடிக்கப்பட்ட அணுகுறைக்கு முற்றிலும் மாறாக அரசியல் ஆதாய நோக்கத்தோடு வங்கிக் கடன் பெற, பா.ஜ.க. குழு அமைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே தமிழக பா.ஜ.க. ஒரு குழுவை அமைத்து, இணையதளத்தை தொடங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுவது, ஆய்வு செய்து பரிந்துரைக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்.

இல்லையெனில் இது குறித்து சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசி இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.