Skip to main content

தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவிப்பு..! - அன்புமணி வரவேற்பு! 

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Anbumani Ramadoss

 

ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப் படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழையும் நிரந்தரமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு ஆகும்.

 

தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு ஆகும். ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் தகுதிக் காலத்தை வாழ்நாள் முழுவதற்கும் செல்லும் வகையில் நீட்டிப்பது குறித்து விரைவில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஒரு நடைமுறை தான். அடுத்த ஒரு சில நாட்களில் அது தொடர்பாகவும் சாதகமான அறிவிப்பை தேசிய ஆசிரியர் கல்விக்குழு வெளியிடும் என்று நம்புகிறேன். இக் கோரிக்கையை பா.ம.கதான் முதலில் எழுப்பியது என்பதில் மகிழ்ச்சி. இதற்காக ஆசிரியர் கல்விக் குழுவுக்கு நன்றிகள்.

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்படும் சான்றிதழின் தகுதிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்குள் நிச்சயமாக வேலை கிடைத்து விடும் என்று நம்பப்பட்டது. அதைப்போலவே முதலில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் போதிய எண்ணிக்கையில் காலியிடங்கள் இல்லாத நிலையில் 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை கிடைக்கவில்லை; அவர்களின் தகுதிச் சான்றிதழ் காலம் நடப்பாண்டில் முடிவடையவிருக்கும் நிலையில், ஆசிரியர் கல்விக்குழு எடுத்துள்ள இந்த முடிவு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்பது உண்மை.

 

தமிழ்நாட்டில் மட்டும் 80,000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணிக்காகக் காத்துள்ளனர். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக்குழு முடிவெடுத்து அறிவித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும் பெரும் நன்மையாக இருக்கும். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET/SET) வென்றோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே, ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச்சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதற்கு நீட்டிப்பதில் தவறு இல்லை. அதற்கான அறிவிப்பு விரைந்து வெளியிடப்பட வேண்டும்.

 

Ad

 

அதே நேரத்தில் ஆசிரியர் தகுதிச்சான்றிதழ் காலம் நீட்டிக்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அனைவரும் பயனடையும் வகையில் ஆசிரியர் நியமனங்களை தமிழ்நாடு  அரசு மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும். ஆசிரியர், மாணவர் விகிதம் மாநில அளவில் கணக்கிடப்படுவதால் தான் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் மாணவர் விகிதத்தைப் பள்ளி அளவில் கணக்கிடுவது தான் சரியானதாக இருக்கும். எனவே, பள்ளி அளவில் ஆசிரியர் மாணவர் விகிதத்தைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.