Skip to main content

“நம்மை எதிர்க்கும் தகுதி தேசிய அரசியலுக்கே இல்லை” - ஓபிஎஸ் 

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

"National politics has no merit against us" - Ops

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அதன்பிறகு அதிமுகவில் ஓ.பி.எஸ். முதல்வராகி, இ.பி.எஸ். முதல்வராகி, சசிகலா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைச் சென்று, டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி துவங்கி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இ.பி.எஸ். முதல்வரானதும் கட்சியின் தலைமை பொறுப்பை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் பிரித்துக்கொண்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக செயல்பட்டு வந்தது. 

 

அதன்பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சி இழக்க, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் வலுவாக ஒலிக்கத் துவங்கி இ.பி.எஸ். இறுதியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தார். சட்டத்தின் படியும், அதிகாரத்தின் படியும் அதிமுகவின் தலைமையாக இ.பி.எஸ். முடிவானார். ஆனால், தொண்டர்களின்படி தானே அதிமுகவின் தலைமை என நிரூபிக்க ஓ.பி.எஸ். கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டை முடித்த சூட்டோடு மே மாதம் 8 ஆம் தேதி டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தார்.

 

இந்நிலையில், இன்று (ஜூன் 7) தஞ்சையில், முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ். ஆதரவாளருமான வைத்திலிங்கம் மகனின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் அதை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தார். ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்களிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழலில் இத்தகைய மாபெரும் இயக்கத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒன்றாகக் கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றுள்ள அரசியல் சூழலில், அதிமுக கழக சட்ட விதிகளுக்கு ஊறு வந்துள்ள இந்த சூழலில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என்று முயற்சி செய்து வரும் சூழலில் நாம் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் நம் அனைவரது எண்ணமும் ஒற்றுமையோடு ஒருசேர இந்த இயக்கத்தை வழி நடத்திட வேண்டும் என்றுதான் அனைவரும் ஏங்கிக் கொண்டுள்ளனர்.

 

நாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் நீங்கள் ஒருங்கிணைய வேண்டுமென்று தான் சொல்கிறார்கள். அதன் அர்த்தம் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் வரவேண்டும் என்று தான் அர்த்தம். திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி சார். இது உள்ளபடியே நமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாக உள்ளது. இதேபோல் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று அரசியல் களத்தில் விளையாடும் போது நம்மை எதிர்த்து நின்று விளையாடும் தகுதி தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலிலேயே யாருக்கும் இல்லை என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக நிர்வாகி ஆலோசனைக் கூட்டம்; திமுக அரசைக் கண்டித்து தீர்மானம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Resolution condemning DMK government in AIADMK executive meeting

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன்,வெங்கட் பிரபு,ஜான் எட்வர்ட்,சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 52க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் 24ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திரளானோர் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Next Story

‘சிபிஐ விசாரணை வேண்டும்’ - எடப்பாடி பழனிசாமி!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'CBI should investigate' - Edappadi Palaniswami

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (22.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அதன்படி மூன்றாம் நாளான இன்று (22.06.2024) பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டும் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

'CBI should investigate' - Edappadi Palaniswami

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன?. 

'CBI should investigate' - Edappadi Palaniswami

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர்  ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது.

சாராய விஷ முறிவுக்கு செலுத்தும் மருந்தின் பெயரை மாற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தடை செய்யப்பட்டுள்ள அந்த மருந்தை ஆபத்தான காலங்களில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால் முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டு பேசி உள்ளார். அரசு மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறது; துரிதமாக செயல்பட்டு இருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.