தமிழகத்தை ஒரே நாளில் முற்றுகையிடும் மோடி - ராகுல்!

Narendra Modi and Rahul gandhi visiting tamilnadu on same day

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் ராகுல் காந்தி. கொங்கு மண்டலத்தில் அடங்கியுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கடந்த வாரம் தேர்தல் பரப்புரை செய்து அசத்திய ராகுல்காந்தி, பிப்ரவரி 14ஆம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார்.

கோவைக்கு வந்திருந்த ராகுல் காந்தியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, தென் மாவட்டங்களுக்கு நீங்கள் வர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் அமிர்தராஜ். தவிர, தென் மாவட்டங்களில் காங்கிரசின் பாரம்பரிய தொகுதிகள் குறித்தும், காங்கிரசின் செல்வாக்கு குறித்தும் பல புள்ளிவிபரங்களுடன் அவர் பேசியதை ரசித்த ராகுல், “எனது அடுத்த சுற்றுப்பயணம் தென் மாவட்டங்களில்தான்” என்று சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அவர் தேர்தல் பரப்புரை செய்வதற்கான சுற்றுப்பயண விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வருகிற பிப்ரவரி 14-ல் மீண்டும் தமிழகம்வருவதற்கு திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, 14ஆம் தேதி தூத்துக்குடி, 15ஆம் தேதி நெல்லை, 16ஆம் தேதி கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்வதற்கேற்ப பயணத் திட்டங்கள் வகுக்கப்படுவதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக பிப்ரவரி 14-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி. அவரை வரவேற்க அதிமுகவும், தமிழக பாஜகவும் தயாராகி வருகின்றன. திட்டங்களைத் துவக்கி வைப்பதுடன் தேர்தல் பிரச்சாரத்தையும் பிரதமர் மோடி துவக்குவார் என்கின்றனர் தமிழக பாஜகவினர்.

ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தை முற்றுகையிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதால் அன்றைய தினம் அரசியல் பரபரப்பு அதிகரிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Narendra Modi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe