Skip to main content

மரண அடி கொடுக்க வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்...

 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஏர்வாடி பஜாரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். 

 

campaignஅப்போது அவர், தி.மு.க. கூட்டணியில் மிட்டா, மிராசு, கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்கமுடியும். ஆனால், அ.தி.மு.க. வேட்பாளர் எளிமையானவர். இன்னும் 1½ ஆண்டு காலம் நாங்குநேரி தொகுதி மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்தால், உங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு வராது.
 

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார் இதை விட பெரிய பதவிக்கு ஆசைப்பட்டு சென்று விட்டார். அவர் தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்து விட்டார். அவரது கட்சிக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
 

ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளூர்காரர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். நீங்கள் கொடுக்கும் மனுவை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து செயல்படுத்துவதில் வல்லவர். எனவே, அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தலை திணித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனிமேல் எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமாவை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.


 

முஸ்லிம் மக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு உதவித்தொகையை நிறுத்தியபோது என்னை வந்து சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் ரூ.6 கோடி உதவித்தொகையாக ஒதுக்கி வருகிறோம். ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சுவதற்கு 5,400 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்குகிறோம். முத்தலாக் தடை சட்டம் மாநிலங்களவையில் கொண்டு வந்த போது, அதற்கு எதிராக அ.தி.மு.க. ஓட்டுபோட்டது. பா.ஜனதாவின் பினாமி ஆட்சி என்று எங்களை கூறி வருகிறார்கள். நாங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்தோம் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
 

தமிழகத்தில் மத்திய அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அ.தி.மு.க. எதிர்க்கும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. ஆனால் கொள்கையை மாற்றிக் கொள்ளும் ஒரே கட்சி தி.மு.க. மட்டும் தான்.
 

பா.ஜனதா, காங்கிரஸ் என மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வினர் மாறி மாறி இடம் பிடித்தனர். பச்சோந்தி கூட சிறிது நேரம் கழித்து தான் நிறம் மாறும். ஆனால் தி.மு.க. உடனுக்கு உடன் நிறம் மாறும் கட்சி ஆகும். ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது அந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்திற்கு என்று எந்த திட்டத்தையும், நிதியையும் வாங்கிவரவில்லை. தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பதவிக்கு வந்த உடன் தி.மு.க. மக்களை மறந்து விடும். தங்களது குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொள்வார்கள்.


 

நான் விபத்தால் முதல்-அமைச்சர் ஆகிவிட்டேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். 1987-ம் ஆண்டு நானும் எம்.எல்.ஏ., மு.க.ஸ்டாலினும் எம்.எல்.ஏ. தான். நான் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா 9 முறை எனக்கு வாய்ப்பு வழங்கினார். அதில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு, தற்போது முதல்-அமைச்சர் ஆகி உள்ளேன். எங்களுடைய பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் தான் நான் முதல்-அமைச்சர் ஆகி இருக்கிறேன். இது பெரும்பான்மையான அரசு.
 

ஜெயலலிதா வழியில் நாங்கள் இரவு-பகல் பாராமல் மக்கள் பணி செய்து வருகிறோம். வீடு இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும். அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பேசினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்