
தமிழக பாஜக சார்பில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கம் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சில் நேற்று (26/05/25) நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சென்னை வந்திருந்தார். அவருக்காக கிண்டி நட்சத்திர ஹோட்டலில் சூட் ரூம் போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவருக்கு அரசு தரப்பில் இன்னோவா கார் தயாராக இருந்தது. பாஜக சார்பிலும் கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதே சமயம் நயினார் நாகேந்திரன் பெயர் அடிப்பட்ட ரூ.4 கோடி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசாரி விசாரணையில் இருக்கும் பாஜகவின் கான்ட்ராவெர்சி பிரமுகர் கோவர்த்தனன், பவன் கல்யாண் செல்வதற்காக ரோல்ஸ் ராய் சொகுசு காரை ஏற்பாடு செய்திருந்தார். அந்த காரை தேர்வு செய்த பவன் கல்யாண் அதில் ஏறி அமர்ந்துகொண்டார். அப்போது பவன் கல்யாணுடன் பயணிப்பதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அந்த காரில் ஏற முயற்சி செய்தார்.
அப்போது பவன் கல்யாணுடன் வந்திருந்த அவரது நண்பர் ஒருவர், நயினாரை தடுத்து விட்டார். உடனே, நான் பாஜக மாநில தலைவர் என நயினார் சொல்ல, அதனால் என்ன? பின்னால் வாருங்கள். இதில் ஏறக்கூடாது" என்று சொல்லி அந்த நபர் தடுத்து விட்டார். மறுபுறம் இதனைக் கவனித்த பவன் கல்யாணும் இது குறித்து எதுவும் சொல்லவில்லை.
இதனால் அவமானப்பட்ட நயினார், மற்றொரு காரில் ஏறி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். பவன் கல்யாண் காரில் நயினார் நாகேந்திரன் ஏற முடியாமல் அவமானப்படுத்தப்பட்டுள்ள இந்த சம்பவம் பாஜகவில் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கிடையே, திட்டமிட்டபடியும் எதிர்பார்த்தபடியும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கருத்தரங்கத்திற்குக் கூட்டம் வராததால் நிகழ்ச்சியும் பிசுபிசுத்து விட்டது.