
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றொருபுறம் பா.ஜ.க.வுடன் மீண்டும் அ.தி.மு.க .கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அதே சமயம் பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கூட்டணி உறுதியான பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான் ஓ. பன்னீர்செல்வம் அந்த கூட்டணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15.06.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “மத்திய உள்துரை அமைச்சர் அமித்ஷா, ‘அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி’ என சொல்லி இருக்கிறார். ஒருவேளை அதிமுக உங்களை விரும்பவில்லை என்றால் என்ன செய்வீர்கள்” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., “யார் விரும்புகிறார்கள் விரும்பவில்லை என்றெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய நிலைப்பாடு கழகச் செயலாளர்கள்; தலைமை கழக நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறோம். மீண்டும் நாங்களே அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தொண்டர்கள் கருத்துக்களை கேட்க இருக்கிறோம். இதையெல்லாம் கேட்ட பிறகு நல்ல முடிவை அறிவிப்போம். மத்திய அமைச்சர் (அமித்ஷா) இங்கே வந்திருந்தார். ஏன் உங்களை அழைக்கவில்லை என்று நீங்கள் கேள்வியாக கேட்க இருப்பீர்கள் என கேள்விப்பட்டேன். எங்களை அவர் அழைக்காதது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., இன்று (16.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த கருத்து குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நயினார் நாகேந்திரன், “அன்றைக்கும் அவர் கூட்டணியில் இருக்கிறார். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அன்றைக்கு உள்ள சூழ்நிலையில் அவர் வந்தது, பேச்சுவார்த்தை தொடர்பானது என்ற வேறு விஷயம்.

அதன் பிறகு நண்பருடைய வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு இது (கூட்டணி) குறித்துப் பேசி முடித்தார்கள். ஏற்கனவே கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களை அழைத்து பேசணும்ங்கிற அவசியம் இல்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என இருவருமே கூட்டணியில் இருக்கிறார்கள். அதிமுக உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் இ.பி.எஸ். தான் கட்சியினுடைய பொதுச்செயலாளராக இருக்கிறார்கள்” எனப் பேசினார்.