Skip to main content

போராட்டம்... வேட்பாளர் தடை... அதகளப்படும் நாங்குநேரி இடைத்தேர்தல்...

சீன அதிபர் ஜின்பிங் சென்னை வருவதையொட்டி நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கென்று பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நேற்றே சென்னைக்குப் பயணமாகி விட்டனர்.
 

nanguneri

 

 

ஆனால், கருப்பு கொடி, கோரிக்கைப் போராட்டம், வேட்பாளரை உள்ளே விட அனுமதி மறுப்பு என அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்குநேரியின் இடைத்தேர்தல்.

4,8719 வாக்குகளைக் கொண்ட தொகுதியில் மூன்றாம் எண்ணிக்கையிலிருப்பவர்கள் 30770 வாக்குகளைக் கொண்ட தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் குலத்தினர், தொகுதிக்குட்பட்ட ஆயர்குளம், அரியகுளம், பாளையஞ்செட்டிகுளம் உள்ளிட்ட 65 கிராமங்களில் இருக்கின்றனர். அவர்களின் நீண்ட மாத கோரிக்கையான பட்டியலின மக்கள் பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கப்பட வேண்டும் என்றதை மத்திய, மாநில அரசுகள் ஏற்று அறிவிக்காமலிருப்பதை இந்த இடைத்தேர்தலில் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். நேற்று மாலை தொகுதியின் மூலக்கரைப்பட்டியிருக்கும் இந்தப் பிரிவினரின் பகுதிக்குள் வாக்குகள் சேகரிக்கப் போயிருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி நடராஜன். அது சமயம் அ.தி.மு.க.வினர் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர்கள் படங்களைப் போட்டு நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்துள்ளனர். ஏற்கனவே கருப்பு கொடி கட்டிப் போராட்டம் நடத்திய அம்மக்கள், “யாரைக் கேட்டு எங்கள் தலைவர்களின் படத்தைப் போட்டீர்கள். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வாக்கு கேட்டு உள்ளே வரவேண்டாம்”, என்று அமைச்சரை வழி மறித்துள்ளனர்.

அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் தலையிட்டும் முடியாமல் போகவே, முடிவில், அமைச்சர் பின் வாங்க நேரிட்டுள்ளது. அதே போன்று பாளை யூனியனில் வருகிற சிவந்திபட்டி கிராமத்தின் முட்டுக்கல் பகுதி மக்கள் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணணை உள்ளே அனுமதிக்காமல் தடைபோட்டனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியோ அ.தி.மு.க.விற்கு ஆதரவில்லை என்று அறிவித்து விட்டார். ஆனால் இலைத்தரப்போ, விவகாரங்கள், எதிர்ப்புக்களைச் சமாளிப்பதற்கு வைட்டமின் ”ப”வை ஆயுதமாக்க முனைந்திருக்கிறது.

அதே சமயம் காங்கரசின் வேட்பாளரான ரூபி மனோகரன் எந்தக் குற்றச்சாட்டுக்கும் இலக்காகதவர் என்றாலும் வாக்கு சேகரிப்பின் போது உடன் செல்லும் தொகுதியின் எக்ஸ் எம்.எல்.ஏ.வான வசந்தகுமாரால் விவகாரங்கள் ஒரு சில இடங்களில் தலை தூக்கியுள்ளன. தொகுதிக்குட்பட்ட நாங்குநேரியின் மறுகால்குறிச்சிக் கிராமத்திற்குள் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் ரூபிமனோகரனுடன் வசந்தகுமார் போயிருக்கிறார். அவரைப் பார்த்து டென்ஷனான கிராமமக்கள்.
 

nanguneri

 

 

‘நீங்க ஒங்க இஷ்டத்துக்கு எம்.பி.யாவுவீக. யாரைக் கேட்டு எம்.எல்.ஏ. பதவியை விட்டீக’ என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். பின்னர் அது சமாளிக்கப்பட்டது. தற்போது வசந்தகுமார் தவிர்க்கப்படும் நபராகி விட்டார்.

தேர்தல் பணிகளில் காங்கிரசின் பங்கு குறைவாக இருந்தாலும் அதனை ஈடுகட்டும் வகையில் தொகுதியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையிலான பெரிய ட்ரூப் தொகுதி முழுக்குப் பரவி நிற்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கூட்டணியிரை உள்ளடக்கிய பூத்கமிட்டி அமைத்தது போன்று வார்டுகளில் வாக்கு சேகரிக்கும் கமிட்டியும் அமைத்து ஸ்கெட்ச் போட்டு பணியை மேற்கொள்ளும் இந்தச் செயல்பாடு கைக்குப் பக்கபலமான ஆயுதம். போதாக்குறைக்கு கடந்த மூன்று நாட்களாக ஊராட்சித் திண்ணைக் கூட்டம், தேர்தல் பிரச்சாரம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் தீவிரச் செயல்பாடுகள் காங்கிரஸ் தரப்புகளே மலைக்கிற விஷயம் மட்டுமல்ல, களத்தில் நிற்பது காங்கிரசல்ல தி.மு.க. என்ற உணர்வுகளே எதிரொலிக்கின்றன.

போராட்டம், புறக்கணிப்பு, தடை. வாக்கு சேகரிப்பு என்று கலகலக்கிறது நாங்குநேரி.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்