/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_263.jpg)
"சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்தது, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு சம முக்கியத்துவம் கொடுப்பது, முன்னாள் அமைச்சர்களைக் கலந்தாலோசிப்பது என ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால், அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்பதால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம்" என தீக்குளிக்க மண்ணெண்ணெய்க் கேனுடன் மூன்று பெண்கள் வந்தது நாகை மாவட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தை அமுதசுரபி மகளிர் சுய உதவிக்குழுவினரே நடத்திவருகின்றனர். நகராட்சி மூலம் 9 பேரும், மகளிர் சுய உதவிக்குழுவினர் 9 பேரும் என மொத்தம் 18 பேர் பணியாற்றிவந்தனர். அவர்களில் வெற்றிச்செல்வி, தமிழ்செல்வி, கமலா ஆகிய 3 பேரும் எந்தவித புகாரும் இல்லாமல் நேற்று (26.05.2021) திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும்தான் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மூன்று பெண்களும் கூறுகையில், "நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பணிநீக்கம் செய்துள்ளனர். ஆனால், நாங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல்தான் பணியாற்றினோம். எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இல்லை எனில் இங்கேயே தீக்குளிப்போம்" என்றனர்.
இதனை சாதகமாக்கிக் கொண்ட அதிமுகவினர் களத்தில் இறங்கி தாசில்தார் ரமாதேவியிடம் மூன்று பேருக்கும் உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் என மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், ஒருபடி மேலே சென்று அம்மா உணவகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மூன்று பெண்களுக்கும் மீண்டும் பணி வழங்காவிட்டால் வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1140.jpg)
வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், "அம்மா உணவகம் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் நடத்தப்படுகிறது. அவர்களை நகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்யவில்லை. அவ்வப்போது ஊழியர்களை அவர்களே மாற்றிக்கொள்வார்கள். 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து எங்களுக்கு எவ்விதப் புகாரும் வரவில்லை. இது தொடர்பாக இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.
“அந்த ஊழியர்களுக்குள் என்ன பிரச்சினையோ, அவர்களுக்குள் நீக்கிக்கொண்டுள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தை அவர்களே பேசி முடித்துக்கொள்வார்கள். இதில் அரசியல் ஆதாயம் தேடத் துடிக்கிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்” என்கிறார்கள் திமுகவினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)