/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jhgvjhgvj.jpg)
எடப்பாடி பழனிசாமிக்குஆதரவாக நாடார் சமூகத்தை வைத்து அரசியல் செய்யத்துவக்கியிருக்கிறார் தொழிலதிபர் வைகுண்டராஜன். ஆனால், என்ன மாதிரி அரசியல் செய்தாலும்எடப்பாடி பழனிசாமியைப்புறக்கணிக்கும் திட்டத்தை நாடார்கள் மறந்துவிடவில்லை என்கின்றன நேர்மையான நாடார் சமூக அமைப்புகள் ! இதுகுறித்து நம்மிடம் பேசிய நாடார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ’’தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் நாடார் சமூகமும் ஒன்று. ஆனால், நாடார் சமுகத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 5 வருடங்களாக எங்கள் சமூகத்தின் எந்த ஒரு கோரிக்கைகளுக்கும் அவர் செவி சாய்க்கவில்லை. குறிப்பாக, தமிழக அமைச்சரவையில் 3 நாடார்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான நாடார் பிரதிநிதித்துவத்தை அமைச்சரவையில் தாருங்கள் எனப் பலமுறை கோரிக்கை வைத்தும் அக்கறை காட்டவில்லை.
எடப்பாடி பழனிசாமியின் சமூகமான கொங்கு வேளாளர் சமூகத்துக்கு போதிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இருந்தது. இந்த சூழலில், அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ணரெட்டி விலகியபோதும், மணிகண்டன் நீக்கப்பட்ட போதும் காலியான அமைச்சரவை வாய்ப்பினை நாடார் சமூகத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். அதைப் பரிசீலிக்கக் கூட முன்வரவில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மரமேறும் நாடார்களை எம்.பி.சி. பட்டியலில் இணைப்பது, தென்மாவட்ட வளர்ச்சிக்கான ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாடார் அமைப்புகள் அரசின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறது. ஆனால், எதற்குமே எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. இதுதவிர , நாடார் சமூகத்தினர்தான் சேர, சோழ, பாண்டியர்களின் வாரிசுகள் என ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்சும் சொன்னார்கள். இதனை வழிமொழிந்து அங்கீகரிக்க எடப்பாடி மறுத்துவிட்டார். இப்படி நாடார்களின் நலன்களுக்காக அவர் எந்த துரும்பையும் அசைக்கவில்லை.
அதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க நாடார் சமூகம் தீர்மானித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் நாடார் விரோத அரசியலை எங்கள் சமூகத்தினர் மறந்துவிடவில்லை. எங்களின் கோபம் இந்த தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும். எடப்பாடிபழனிசாமி தொகுதியிலுள்ள நாடார்களே அவரைப் புறக்கணிப்பார்கள்.
இதனை உணர்ந்துள்ள வைகுண்டராஜன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாடார் சமூகத்தை ஒருங்கிணைக்கிறேன் என ஒரு கூட்டத்தை அண்மையில், சென்னையில் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில், நாடார் சமூகத்தின் வலிமையான அமைப்புகள் எதுவும் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பின்னால் நாடார் சமூகமும் இல்லை. தனது குடும்ப பிரச்சனைக்காக நாடார் சமூகத்தை மையப்படுத்தி தனது சுயநல அரசியலைச் செய்திருக்கிறார். செல்வாக்கு இல்லாத தனிநபரை நம்பி எடப்பாடி பழனிசாமி சென்றால், ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் நாடார் சமூகத்தின் கோபம் இன்னும் அதிகரிக்கும் ‘’ என்கின்றனர் நம்மிடம்.
இந்நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள நாடார் சமூகத்தின் மனநிலை குறித்து மாவட்ட அமைச்சர்கள் மற்றும் தன்னை சந்திக்கும் நிர்வாகிகள் பலரிடமும் எடப்பாடி பழனிசாமி விவாதித்திருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)