publive-image

Advertisment

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாகத்தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் எனத்தகவல் வெளியாகி இருந்த நிலையில் டி.ஆர்.பி. ராஜாவிற்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.

முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில்நுட்பத்துறை நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. டி.ஆர்.பாலு, “எனது மகன் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எனது மகன் டி.ஆர்.பி.ராஜா மிகச்சிறப்பாக பணியாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளத்தில் இடம் பெற வேண்டும். இதுதான் என் மிக முக்கியமான ஆவல்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி பணியாற்றி தமிழகத்தை அவர் மேம்படுத்த வேண்டும் என்பதுதான் என் மிக முக்கியமான வேண்டுகோள்” எனக் கூறினார்.