mutharasan talk about central govt and rss

Advertisment

நெல்லையில் நவ. 01-ல் தொடங்கி 3 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் மாநில ஏ.ஐ.டி.யு.சி.மாநாடு நடைபெற்றது. முடிவு நாளான 3 ஆம் தேதியன்று மதியம் பேரணிக்குப் பின்பு பொதுக்கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி.யின் 20-வது மாநில மாநாடு நெல்லை ரோஸ் மகாலில் எம்.பி. சுப்பராயன் தலைமையில் நடந்தது. சடையப்பன் வரவேற்றார். இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன் தொடங்கி வைத்தார்.

இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தன் துவக்க உரையில்,“ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்திற்கு மாறாக தொழிலாளர்களுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறது. வாஜ்பாய் பிரதமராகஇருந்த போது பொதுத்துறை நிறுவனங்கள் அதிகமாக வந்தது. மாறாக, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனம்கூட உருவாக்கப்படவில்லை. அவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் மற்றும்மாணவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து கடந்த 26 ஆம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி போராட்டத்திலும் ஈடுபட்டோம். அவரிடம் நேரடியாகமனுக் கொடுக்கச் சென்ற போதுஅவர் வாங்க மறுத்து விட்டார்.

Advertisment

மத்திய அரசின் ஆட்சியில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்றும்,கருப்பு பணம் மீட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையுமில்லை. மதங்களைக் காட்டி மக்களிடையே பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது நடக்காது. இந்த அரசு ஆர்.எஸ்.எஸ்ஸின் கரங்கள் என்று நாங்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறோம்” என்று பேசினார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய எம்.பி.சுப்பராயன், “இந்தியாவில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் ஆங்கிலேயர் காலத்திலேயே உருவானதாகும். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. வருகிற 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கேரளமாநிலம் ஆலப்புழையில் தேசிய அளவிலான மாநாடு நடக்கவிருக்கிறது. தொழிற்சங்க விரோதப் போக்கை கடைப்பிடிக்கிற ஒன்றிய அரசு வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களை வரவேற்கிறது. உள்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது” என்றார்.

மாநாட்டில் ஏ.ஐ.டி.யு.சி.யின் பொதுச்செயலாளர் மூர்த்தி அறிக்கையினை வாசித்தார். ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசியச் செயலாளர் வஹிதா நிஜாம், அகில இந்தியத்தலைவர் ராஜா ஸ்ரீதர், சி.ஐ.டி.யு.வின் மாநிலப் பொதுச்செயலாளர்களான சுகுமாரன், சேவியர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரான காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.