மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள்படகில் கோடியக்கரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் வீரவேல் என்ற மீனவர் காயமடைந்தார். தற்போது அவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வரும் நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய கடற்படை தரப்பில் தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழக மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்தியகடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் துயரத்தை ஏற்கனவே பிரதமர் நன்கு அறிவார். இந்தியகடற்படையினரின் செயல் அடித்தட்டில் வாழும் மீனவர்களிடம் நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும்.என வலியுறுத்தியுள்ளார்.