Advertisment

முருக பக்தர்கள் மாநாடு; விரோதிகளுக்கு சவுக்கடி கொடுப்போம் - பாஜக பிரசாத்! 

 Murugan devotees' conference; We will give a whip to the enemies! - BJP Prasad!

Advertisment

தமிழகம் தழுவிய முருக பக்தர்கள் மாநாடு வருகிற 22-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மாநாடு சிறப்பாக நடக்கக்கூடாது என்று ஆளும் தரப்பிலிருந்து நெருக்கடிகள் தருவதாக தமிழக பாஜகவினரும் ஆன்மீக அமைப்பின் தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், "மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்

இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisment

மேலும் முருக பக்தர்கள் மாநாட்டை திட்டமிட்டு தடுக்கும் விதமாக, திமுக அரசின் தூண்டுதலின் பேரில் முருக பக்தர் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சில அமைப்புகள் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்து இந்து விரோத நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன.

சமூக நல்லிணத்தை குறைக்கும் வகையில் கீழ்த்தரமாக முருக பக்தர்கள் மாநாடு குறித்தும், இந்து மதம் குறித்தும், இந்து கடவுள்கள் குறித்தும் இகழ்ந்து அவர்கள் பேசி வருவதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. தமிழகம் முழுக்க கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, முருக பக்த மாநாட்டு அழைப்பிதழ்களை விழா குழுவினர் விநியோகிக்க, காவல்துறையினர் தடை செய்கின்றனர். முருக பக்தர்கள் மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர்.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்து வழிகாட்டிய தமிழகம், எப்போதுமே ஆன்மிக பூமி. அன்னிய மத படையெடுப்பாளர்களால் வட மாநிலங்களில், ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகளை கடந்த கோவில்கள் ஏராளம் உள்ளன. தமிழகத்தின் ஆன்மாவான ஆன்மிகத்தை சிதைக்க பல முயற்சிகள் நடந்தாலும் அவற்றையெல்லாம் முறியத்து ஆன்மிக மண் என்பதை நிரூபித்தே வந்துள்ளது.

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிகமிக முக்கியமானது முருக பக்தி. தமிழக மக்களின் உணர்வுகளோடு கலந்து விட்ட கடவுள் முருகன். தமிழகத்தில் பல்லாயிரம் முருகன் கோவில்கள் இருந்தாலும், அறுபடை வீடுகள் மிக முக்கியமானவை. தமிழக மக்களின் பெரும்பாலானோர், அறுபடை வீடுகளுக்கும் சென்று, முருகப் பெருமானை தரிசிப்பதை தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்கள்.

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலை மீது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள மலையில் அன்னிய மத ஆக்கிரமிப்பாளர்களால் "சிக்கந்தர் தர்கா" ஒன்று இடையில் கட்டப்பட்டுள்ளது. இதை காரணம்காட்டி, தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான கந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற சில சக்திகள் முயற்சித்தன. சில மத அடிப்படைவாத அமைப்பினர், முருகன் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு விருந்து வைக்கப் போவதாக அறிவித்தனர்.

இதைக் கண்ட ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்தது. அதன் விளைவாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு திமுக அரசு தடைவிதித்தபோதும், நீதிமன்றம் அனுமதி அளித்த சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டது, ஹிந்து விரோத அரசியல் கட்சிகளை மிரளச் செய்தது.

திட்டமிடாத ஆர்ப்பாட்டத்திற்கே மிரண்டவர்கள், திட்டமிட்டு நடக்கும் மாநாட்டை கண்டு அலறி கொண்டிருக்கிறார்கள். தமிழகம் ஆன்மிக பூமி என்பதை நிரூபிக்கவும், மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்திற்கு மட்டும் எதிராக நடக்கும் திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தவுமே இந்த மாநாடு நடக்கிறது.

பிரிவினைவாதம், வகுப்புவாதம் மதவாதம் பேசி, சாதியால் மதத்தால், மொழியால், இனத்தால் வேறுபடுத்தி இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த தீய சக்திகளுக்கு, தொடர் சதிகளுக்கு, தேர்தல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்து மதத்தின் எழுச்சி திருவிழாவாக,முருக பக்தர்கள் மாநாடு தடைகளை உடைத்து நடைபெறும்.

அரசியல் சார்பற்று முருக பக்தர்களை ஒன்று திரட்டும் இந்த மாநாடு பெரும் வெற்றி பெறும். அது ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களின் எழுச்சி, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தே தீரும்!" என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஏ.என்.எஸ்.பிரசாத்.

report
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe