Advertisment

“தமிழ்நாடு, தமிழன், தமிழ் ஆகிய மூன்றும் ஆளுநருக்கு பிடிக்கவில்லை” - டி.ஆர்.பாலு எம்.பி கடும் விமர்சனம்

mp tr balu talk about tamilnadu governor rn ravi speech

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் சென்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியேதமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப்போகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனியாதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல.

Advertisment

வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார். 'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும். அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட;அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.

சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தரப்பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது;தமிழ்நாடு எப்படி இருக்கிறதுஎன்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு! ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு! இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு! ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு! கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு! தோல்பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு! கல்வியில்இரண்டாவது இடம்! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது.

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். தேசிய சராசரி பணவீக்கமானது 6.2 விழுக்காட்டில் இருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால், தமிழ்நாட்டின் பணவீக்கமானது 5.37 விழுக்காடாகக் குறைந்தது. வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது தமிழகத்தில். சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்ததுதான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டி இருக்கிறார் எங்கள் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த வெற்றியானது, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம். அதில் ஒருவராக ஆளுநர் இருப்பதுதான் அதிர்ச்சியைத் தருகிறது. இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது? 'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக் கூடாது என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். தொடக்கூடாத சாதி, கண்ணில் படக்கூடாத சாதி, மூச்சுக்காற்று படக்கூடாத சாதி எனப் பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தைமூலையில் முடக்கி இழிவுபடுத்தியது திராவிடமல்ல; ஆரியம். எனவே, பிரிவினைக்கு எதிராகக் கண்ணீர் வடிக்கும் ஆர்.என்.இரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல.

காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம். தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம். 'வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இந்த ஐம்பதாண்டு கால உண்மையை, தனக்கு ஏதோ மேடை கிடைத்துவிட்டது என்பதற்காக மாற்ற முனையக் கூடாது. அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசி வருகிறார் ஆளுநர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மைதான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா? அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணாசிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமா? வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாடுகளைக் கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது.

அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை. தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக ரவி அவர்கள் பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe