Advertisment

புதிய நாடாளுமன்றத்திற்குச் சென்ற சு.வெங்கடேசன் எம்.பி; அதிர்ச்சி பேட்டி!

MP Su Venkatesan who went to the new Parliament; Shock interview

Advertisment

மதுரை எம்.பி. சு எங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று நாடாளுமன்றத்தின் ரயில்வே துறையின் ஆலோசனைக்கூட்டமும், கல்வித்துறையின் நிலைக்குழு கூட்டமும் நடைபெற்றது. அதில் பங்கேற்க நான் வந்திருந்தேன். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பார்வையிட்டேன். அது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. குறிப்பாக புதிய கட்டடத்தின் காட்சிகள் முழுக்க சனாதானத்தை விளக்கும் காட்சியாகவும் சமஸ்கிருதத்தை போற்றும் காட்சியாகவும் தான் இருக்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலை போராட்டம் போன்றவற்றின் எந்த அடையாளமும் அதில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பாஜகவின் அலுவலகத்தை போல நாடாளுமன்ற கட்டடத்தை வடிவமைத்துள்ளார்கள்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாணக்கியரின் உருவத்தை பொறித்துள்ளார்கள். கையில் தண்டம் ஏந்தி இன்னொரு விரலை ஆவேசத்தோடு நீட்டி இருக்கும் சாணக்கியன் ஏறக்குறைய 30 அடி உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளார். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது. அரசியல் சாசன சட்டம் போற்றப்பட வேண்டிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்தை நினைவு படுத்த வேண்டிய தேவை என்ன என்பது முக்கிய கேள்வி.

அதைக்கடந்து உள்ளே போனால் மைய வளாகத்தில் சுமார் 250 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாக விஷ்னு புராணத்தில் வரும் பாற்கடலை கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேரு மலையை மத்தாக ஆதிசேசனை கயிறாக கொண்டு தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமும் பாற்கடலை கடைகிற இந்த காட்சிக்கும் நாடாளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அப்படிப்பட்ட மையமான இடத்தில் பிரிட்டிஷ்க்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை காட்சிப்படுத்த வேண்டும். அப்படி காட்சிப்படுத்தினால் தங்களது துரோக வரலாறு நினைவு படுத்தப்படும் என்ற அச்சத்தில் புராணங்களை காட்சிப் படுத்தியுள்ளனர்.

Advertisment

இதையெல்லாம் அடுத்து உள்ளே போனால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அரசியல் சாசனத்தின் நூல் வைக்கப்பட்டு அதை காட்சிப்படுத்தும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன புத்தகத்தின் கோட்டோவியத்தை நந்தலால் போஷ் வரைந்துள்ளார். அதில் 22 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த 22 ஓவியங்களும் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை நினைவு படுத்தவும், இந்தியாவின் பன்மைத்துவத்தை நினைவு படுத்தவும் வரையப்பட்ட ஓவியங்கள். அதில் 16 ஓவியங்களை நாங்கள் காட்சிப்படுத்த மெருகூட்டியுள்ளோம் என சொல்லி 16 காட்சிகளை உருவாக்கியுள்ளார்கள். நந்தலால் போஷின் முதல் படம் சிந்துவெளி நாகரீகம் என்று சொல்லக்கூடிய எருதில் இருந்து துவங்கும். ஆனால் இவர்கள் வரைந்துள்ள முதல் படம் தவமிருக்கும் முனிவரில் இருந்து துவங்குகிறது. வேதகாலத்தில் இருந்து இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டு, ராமாயண ஓவியங்கள் நந்தலால் போஷின் ஓவியங்களில் இருந்தாலும் அது காவிய காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் இவர்கள் வரலாறு என கட்டமைத்துள்ளார்கள்.

சிந்து வெளி நாகரீகம், புத்தர்கள் காலம், மௌரியர்கள் காலம், முகலாயர்கள் காலம் என அனைத்திலும் இருந்து இந்திய ஜனநாயகம் எப்படி வளர்ந்தது என்று நந்தலால் போஷ் காட்சிப்படுத்தியிருப்பார். அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டது. ஒற்றைத் தத்துவமாக ஒற்றைக்கோட்பாடாக இந்துத்துவா கோட்பாடு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் காட்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.வேதனை என்னவென்றால் சவார்க்கரின் பிறந்த நாளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் முழங்க மன்னராட்சியின் அடையாளமான செங்கோல் ஏந்தி நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது என்று தான் நாம் நினைத்திருந்தோம். திறக்கப்பட்டது மட்டுமல்ல இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டடத்தை அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்” என்றார்.

Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe