Advertisment

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு எம்.பி.சீட்! யார் இந்த சச்சிதானந்தம்?

MP seat for Sachidananda from a farming family!

தி.மு.க. கோட்டையான திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குஒதுக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு தோழர்களுக்கு ஆதரவாக உடன்பிறப்புகளும் தேர்தல் களத்தில் குதித்து வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில் தான் தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாநிலக் குழு உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சச்சிதானந்தத்தை திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளராக மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்தார். ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திலிருக்கும் காமாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள கட்டச் சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் தான் சிபிஎம் வேட்பாளரான சச்சிதானந்தம். இவருடைய மனைவி பெயர் கவிதா. இவர் இரண்டு முறை காமாட்சிபுரம் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்து இருக்கிறார். இவர்களுக்கு வைசாலி, மிருணாளினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த இரண்டு மகள்களுடன், மனைவியையும் கட்சியின் பல போராட்டத்திற்கு கூட அழைத்துச் சென்று குடும்பத்தையே கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டும் இருக்கிறார்.

Advertisment

MP seat for Sachidananda from a farming family!

இவர் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தாவான முத்துச்சாமி35 ஆண்டுகளாக தொடர்ந்து காமாட்சிபுரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறார். அதை தொடர்ந்து இவருடைய அப்பாவான ரத்தினவேலும் கட்சியில் ஈடுபாடாக இருந்து வந்தார். அதை தொடர்ந்து தான் சச்சிதானந்தமும் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர்களுக்கு காமாட்சிபுரம் பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்களும் இருக்கிறது. அந்த நிலங்களை வைத்துதான் விவசாயமும், தாத்தன் - பாட்டன் காலத்தில் இருந்து செய்து கொண்டு வந்தனர். அதுபோல் சச்சிதானந்தமும் கட்சிப்பணியுடன் விவசாயமும் செய்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஜி.டி.என் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்தார். அப்போது மாணவப் பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பல போராட்டங்களில் ஈடுபட்டு கட்சிப் பணியாற்றிக்கொண்டு 37 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும், 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். 1987ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்டத்துணைச் செயலாளராகவும், திண்டுக்கல் நகரத்தலைவராகவும் பணியாற்றியவர்.

1992ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994-2002 வரை மாவட்டச் செயலாளராக, மாநிலச் செயற்குழு உறுப்பினராக, மாநிலத்துணை செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்டச் செயலாளர், மாநில துணைச் செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தனது 26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு 1996-2006 வரை இரண்டு முறை தலைவராக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

அதேபோல் கடந்த 2018ம் ஆண்டு முதல் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்ததின் மூலம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் இருக்கும் தோழர்களை சந்தித்து கட்சி வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் பட்டி தொட்டி முதல் நகரம் வரை கிளைகளையும் உருவாக்கி, கட்சி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். அதுபோல் கட்சியின் மூலமாக இரத்ததான கழகத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதில் 32 முறை இரத்ததானம் செய்துள்ளார். விவசாய சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் பழனி வட்டத்தில் உபரி நில மீட்பு போராட்டத்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த பல ஏக்கர் நிலத்தை மீட்டு ஏழை விவசாயிகளுக்கு கொடுத்தும் இருக்கிறார்.

MP seat for Sachidananda from a farming family!

கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களிலிருந்து சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கட்சியின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளைத்திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி அத்திட்டத்தை கைவிட செய்து விவசாய விளை நிலங்களை பாதுகாத்தவர். புலையன் இனத்தை மீண்டும்பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கொடைக்கானல் துவங்கி சென்னை வரை அம்மக்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். இவர் காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத்தில் தலைவராக இருந்தபோது எவ்வித லஞ்ச, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை நடத்தியவர் என்பதும், அதைத்தொடர்ந்துதான் கட்சிப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியதின் பேரில் தான் தற்போது திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளராக தலைமை, சச்சிதானந்தத்தை அறிவித்ததின் பேரில் தோழர்களும், கூட்டணி கட்சியினரும் வெற்றிக்காக களத்தில் குதித்து தொகுதி முழுக்க சின்னங்கள் வரையவும், தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

cpm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe