ADVERTISEMENT

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தானே... அது நடக்கப் போவதில்லையே...” - கனிமொழி எம்.பி.

10:21 AM Nov 09, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று முன்தினம் (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும்.

சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி நேற்று (08-11-23) வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், அண்ணாமலையின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தானே. அது நடக்கப் போவதில்லையே... பின் எதற்கு கவலைப்பட வேண்டும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT